September 7, 2024
செய்திக் குறிப்புகள்

சாய்பாபா புகழ்பாடும் இசைத்தொகுப்பு – விவரங்கள்

‘மேதைகளுக்குச் சமர்ப்பணம்’ (Tribute to the Legends) என்கிற ‘மாபெரும் குரல் தேடும்’ செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி ‘நெஞ்சில் நீயே ஸாயி’ என்கிற ஏழு பாடல்கள் கொண்ட இசை ஆல்பம் இந்தியாவின் 11 மொழிகளில் வெளியாகவுள்ளது.

ஏற்கெனவே எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடி சோனி மியூசிக் மூலம் தமிழில் வெளியான இசைத் தொகுப்பு மீண்டும் வெளியீடு.

தமிழ்நாட்டில் இருந்து தேர்வில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் குரலும் எஸ்பிபியின் குரலும் இணைந்து இசைத் தொகுப்பு மீண்டும் வெளியிடப்படும்.

மற்ற 10 மொழிகளைப் பொறுத்தவரை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் இணையம் வழியே போட்டியாளர்கள் பங்கேற்க அவர்களைத் தேர்வு செய்து அந்தந்த மொழிகளில் பிரபலமான பாடகர்களுடன் இணைந்து ஆல்பம் உருவாக்கப்படும்.

இந்த வகையில் இலட்சக்கணக்கான குரல்கள் இந்தப் போட்டியில் பங்கெடுக்கும்.

இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்துபவர் மும்பையில் வாழும் சேதுமணி ஆனந்தா. இவர் பாடல் ஆசிரியரும் இசையமைப்பாளரும் பாடகரும் ஆவார். இவர் ஏராளமான பக்தி இசைப் பாடல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவருக்கு உறுதுணையாக அவரது நண்பரும், திருட்டு இரயில், முத்து நகரம் புகழ் பிரபல இசை அமைப்பாளர் ஜெயபிரகாஷ் உள்ளார்.

எஸ் .பி. பாலசுப்பரமண்யத்தின் 77 ஆவது பிறந்த நாளை ஒட்டி நடைபெறும் மாபெரும் நிகழ்ச்சிக்கான இந்த முன்னெடுப்பு பற்றி சேதுமணி ஆனந்தா பேசும்போது………

“எனக்கு எந்த வாத்தியமும் வாசிக்கத் தெரியாது. பாடல் கூட பாடத் தெரியாது. ஆனால் நீ இசையமைப்பாளர் ஆவாய் என்று மெல்லிசை மன்னர் எம்எஸ்வி அவர்கள் என்னை ஆசீர்வாதம் செய்தார். அதனால் நான் இசை உலகில் புகுந்து பக்திப் பாடல்கள் நிறைய வெளியிட்டுள்ளேன். எம் எஸ்வி அவர்கள் எனது மனிதனாக இரு என்ற திரைப்படதிற்கு இசையமைத்தார். டாக்டர் எஸ்பிபி அவர்கள் சாயிபாபா மேல் 11 மொழிகளிலும் பாடி நான் எங்களது சேனலான ஃபர்ஸ்ட் சான்ஸ்(First Chance) மூலமாக வெளியிடுவதாக ஒரு திட்டம் இருந்தது. அதில் முதலில் தமிழில் பாடிக் கொடுத்தார்.

இப்பொழுது அந்த இரு மேதைகளுக்கான சமர்ப்பணமாக இந்த இசைத் திட்டத்தை நாங்கள் தொடங்கி எஸ்பிபி அவர்களின் 77வது பிறந்தநாள் அன்று அவர்களுக்கான சமர்ப்பணமாக இதை வெளியிட ஆவலாக இருக்கிறோம். இதற்கான குரல் தேர்வு தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள் பாண்டிச்சேரி, திருச்செந்தூர் என 40 இடங்களில் நடைபெறுகிறது. கால் இறுதி, அரையிறுதிப் போட்டிகள் 6 முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளன. இறுதிச்சுற்று சென்னையில் நடைபெறும்.

இது தமிழ் மொழியைப் பொறுத்தவரை உள்ள திட்டம். இது தவிர இணையதளத்தின் மூலமாக இந்தியாவின் உள்ள பிற மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, சிந்தி, பெங்காலி, போஜ்பூரி என பிற மொழிகளில் இருந்தும் பாடகர்களைத் தேர்வு செய்து அந்தந்த மொழியில் புகழ்பெற்ற பாடகர்களுடன் இணைந்து சாயிபுகழ் பாடும் இசைத் தொகுப்பை வெளியிடும் திட்டம் உள்ளது.

நூறு ரூபாய் கனவு என்கிற பெயரில் இந்த கனவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் வரும் வருவாய் ஏராளமான அறக்கட்டளை சேவைகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டம் பற்றி மேலும் அறிய பர்ஸ்ட் சான்ஸ் இந்தியா டாட் காம் www.firstchanceindia.com இணையதளத்தில் சென்று நீங்கள் அனைத்து விவரங்களையும் அறியலாம். பாடும் திறமை உள்ளவர்கள் சென்னை சாலிகிராமத்தில் உள்ள எங்களது கமலா ஸ்டுடியோ வந்து பாடியும் தங்கள் திறமையைப் பதிவு செய்யலாம் “என்கிறார்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு,

நான் ஒரு முறை அனந்தா அவர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கனவு திட்டம் பற்றிக் கூறியதை அறிந்து வியப்பாக இருந்தது. தமிழ்த் திரை உலகில் எவர் பற்றியும் எதிர் கருத்துகள் உண்டு. ஆனால் எம் எஸ் வி, எஸ் பி பி என்கிற இரு இசைக் கலைஞர்கள் பற்றி எந்த விதமான எதிர் கருத்துகளும் வந்ததில்லை. அனைவராலும் நேசிக்கப்பட்ட இசைக்கலைஞர்கள் அவர்கள். இரு துருவங்களாக இருந்த எம் ஜி ஆர், சிவாஜி என்ற இருவருக்கும் எம் எஸ்வி இசையமைத்தார். அதேபோல் எஸ்பிபி அனைவருக்கும் பாடினார். அனைவருடனும் நட்புடன் இருந்தார். அவர்கள் இருவரும் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்கள்.

இசை கற்றுக் கொடுத்து வருவதில்லை .இசை ஞானம் வர ஆண்டவன் அருள் வேண்டும். இசைஞானம் உள்ளுக்குள் தானாக வர வேண்டும்.

இசைஞானம் என்பது சாதி பார்த்து வருவதில்லை.எல்லா சாதியினருக்கும் எல்லாமும் வரும். இன்னார்க்கு இன்னது என்பதெல்லாம் உடைபட்டு விட்டது.

இறைவன் அருள் இருக்கும் அனைவருக்கும் இசை வரும். அப்படி ஒருவராகவே அனந்தாவைப் பார்க்கிறேன்.ஏனென்றால் தனக்கு எதுவும் இசைக்கருவிகள் வாசிக்கத் தெரியாது என்றார். ஆனால் அவருக்கு இறைவன் கொடுத்த இசைஞானம் உள்ளது .அவர் இப்படி ஒரு திட்டத்தைச் செய்யும் போது நம்மால் முடிந்த ஆதரவு தரவேண்டும். அவரை ஆதரிக்க வேண்டும். இந்தப் பணி சிறப்பாக அமைந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts