செய்திக் குறிப்புகள்

தாமாக முன்வந்து உதவும் ஏ.ஆர்.ரகுமான் – விவரங்கள்

திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செலவமணி இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில்………

26-02-2023

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சார்பில் அனைவருக்கும் வணக்கம்.

திரைப்படத்துறையில் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து ஆபத்தான, சிரமமான நிலையிலேயே இருந்துள்ளது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்படத் தயாரிப்பாளிடமும், சின்னத்திரை தயாரிப்பாளர்களிடமும் கலந்து பேசியோ, வற்புறுத்தியோ, வேண்டுகோள் விடுத்தோ எங்கள் சம்பளத்தை ஓரளவு உயர்த்திவருகிறோம். திரைப்படத் துறையில் சாதாரண தொழிலாளர்கள் சம்பளம் இன்று ரூ. 1000/- தொடுவதற்கு 100 ஆண்டுகள் கடக்க வேண்டியுள்ளது.

மத்திய, மாநில அரசுதிரைப்படத் துறைக்குச் செய்யும் உதவிகள் மேலோட்டமாகவே நின்று விடுகிறது. அஸ்திவாரமான தொழிலாளர்களைச் சென்று அடைவதில்லை. இதுவரை திரைப்படத்துறையில் பணிபுரியும்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்களைக் காப்பாற்ற எந்த வழியும் இல்லை.

ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் பணிபுரியும்போது இறந்தால் மட்டுமே அவர்களுக்கு ஏதோ ஒரு உதவி கிடைக்கிறது. ஆனால் சிரமப்பட்டு திரைப்படம் தாயாரிக்கின்ற சிறு தயாரிப்பாளர்களின் படங்களில் பணிபுரியும்போது விபத்து ஏற்பட்டால் அவர்களைக் காப்பாற்ற எந்த நாதியுமில்லை.

எனவே திரைப்படத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவி செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற நிதியாண்டு பட்ஜெட்டில் திரைப்படத்தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவிகள் வழங்குகின்ற திட்டத்தை அறிவிக்குமாறு தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாக இசையமைப்பாளர் திரு.ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் ஒரு நற்பணியைத் துவக்குகின்றார். திரைப்படத் துறையில் ஒரு அங்கமான லைட்மேன்கள் பணிபுரியும்போது விபத்து நேர்ந்தால் அவர்களுக்கு உதவ ஒரு நிதியாதாரத்தை (CORPUS FUND) ஏற்படுத்த உள்ளார். இதற்காக வருகின்ற மார்ச் 19ஆம் தேதி நேரு உள்ளரங்கில் மாபெரும் இசைநிகழ்ச்சி நடத்த உள்ளார்.

இதில் திரட்டப்படுகின்ற நிதியை பணிபுரியும் லைட்மேன்கள் விபத்தில் இறந்தால், அவர்கள் குடும்பத்திற்கு உதவ, இந்த நிதியை பயன்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார். தானாக முன்வந்து இந்த உதவியைச் செய்கின்ற அவருக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் எங்கள் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நிதி லைட்மேன் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மட்டும் ஆகும். இது போன்றே அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உதவுகின்ற திட்டத்தை சம்மேளனம் செய்யுமானால் நான் உடனிருந்து ஒத்துழைப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் அவர்களை முன் உதாரணமாக்க் கொண்டு திரைப்படத்துறையில் உள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இது போன்றே தொழிலாளர்களுக்கு உதவ முன் வரவேண்டும் என பணிவன்புடன் கோரிக்கை வைக்கின்றோம்.

திரைப்படத் துறையில் உள்ள அனைவரும் அவர்களின் சம்பாத்தியத்தில் 1 % சதவிகித்தை நன்கொடையாக வழங்கினால் திரைப்படத்துறையில் அனைத்து தொழிலாளர்களும் காப்பாற்றப்படுவார்கள் என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம்.

அது போன்றே தமிழக அரசும் திரைப்பட டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டிற்கு ஒரு ரூபாய் என பிடித்தம் செய்து ஒரு நிதியாதாரத்தை உருவாக்கி 60 வயது கடந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு மாத ஓய்வு ஊதியம் வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு மறைந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் திரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்ட வழங்கிய பையனூர் இடத்தில் திரைப்பட அரங்குகள் கட்டப்பட்டுவருகின்றன மேலும் கலைஞர் நகரம் என்று பெயரிடப்பட்ட முகப்பு நுழைவாசலையும், கலைஞர் திருவுருவச்சிலையையும் அமைத்து வருகின்றோம். இத்திருவுருவச்சிலை மற்றும் முகப்பு வாசலை திறந்து வைக்குமாறும், தாங்கள் தந்தை திரைப்பட துறையினருக்கு குடியிருப்புகள் கட்ட வழங்கிய இடத்தில் குடியிருப்புகள் கட்ட உதவி செய்யுமாறும் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts