கர்நாடகாவிலும் கால்பதித்த ரெட்ஜெயண்ட் – விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இவர் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.அந்தப் படத்திற்கு லவ் டுடே என பெயர் வைத்துள்ளனர்.
அந்தப்படத்தில் நாயகியாக இவானா நடித்திருக்கிறார். இவர்களோடு சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமைக்காக சிலர் அணுகியிருக்கிறார்கள். சில கோடிகள் விலை கொடுக்கவும் தயாராக இருந்திருக்கிறார்கள்.
ஆனால், படத்தயாரிப்பு நிறுவனம், ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடம் இப்படத்தைத் தமிழக திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைக் கொடுத்துவிட்டார்கள்.இதனால் இப்படத்தின் தமிழக உரிமை கேட்ட விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ரெட்ஜெயண்ட் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் செண்பகமூர்த்தி, இப்படத்தின் கர்நாடக திரையரங்கு வெளியீட்டு உரிமையைப் பெற்றிருக்கிறாராம்.
ரெட்ஜெயண்ட் நிறுவனம் எல்லாப்படங்களையும் விநியோக முறையிலேயே வெளியிடும். அந்த நடைமுறையை கர்நாடகத்திலும் அறிமுகப்படுத்தியிருக்கிறாராம் செண்பகமூர்த்தி.
அங்கு அப்படத்தை எம்ஜி முறையில் வெளியிட விநியோகஸ்தர்கள் முன் வந்திருக்கிறார்கள். ஆனால், படத்தயாரிப்பு நிறுவனம், செண்பகமூர்த்தியிடம் விநியோக முறையில் வெளியிட ஒப்புக்கொண்டு படத்தைக் கொடுத்திருக்கிறது.இதனால் விநியோகஸ்தர்கள் வட்டாரம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில்தான் இந்த வியாபார நடைமுறையைக் கொண்டு விநியோகஸ்தர்களை காலி செய்தனர். இப்போது கர்நாடகத்திலும் அந்த வேலையைத் தொடங்கிவிட்டனர் என்று சொல்லி வருத்தப்படுகின்றனர்.











