ராயன் வெற்றி – தூக்கம் தொலைத்த இருவர்

ஜூலை 26 அன்று வெளியான படம் ராயன்.தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தனுஷ் நாயகனாக நடித்திருப்பதோடு எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி,செல்வராகவன்,பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. படம் நன்றாக இருக்கிறது தனுஷ் சிறப்பாக இயக்கியிருக்கிறார் என்று பாராட்டுகளையும் அதீத வன்முறையை வெளிப்படுத்தி சமுதாயச் சீரழிவை ஏற்படுத்தும் படம் என்கிற எதிர்மறைக் கருத்துகளையும் ஒருங்கே பெற்றுவருகிறது இப்படம்.
விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூலுக்குக் குறைவில்லை. முதல்காட்சியிலிருந்தே அரங்கு நிறைந்த காட்சிகளாக் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல்நாளில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 11 கோடி வசூலையும் இரண்டாம் நாளில் சுமார் பதிமூன்று கோடி வசூல் என்றும் சொல்லப்படுகிறது.
படம் வெளியான முதல்நாளில் கிடைத்த வரவேற்பால் உற்சாகமடைந்த தனுஷ், அன்றிரவே அப்படத்தில் பங்காற்றிய முன்னணியினருக்கு விருந்து கொடுத்து மகிழ்ந்தார்.
அதில், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி,எஸ்.ஜே.சூர்யா, சந்தீப்கிஷன்,பிரகாஷ்ராஜ் உள்ளிட்டு படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகையர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.இதில் கலந்து கொள்வதற்காக படப்பிடிப்பில் இருந்து விடுமுறை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
அப்போது அவர்களிடம் பேசிய தனுஷ், நான் இயக்கிய முதல்படம் வெற்றி அடைந்ததோடு நல்ல பெயரையும் வாங்கியது.ஆனால் அந்தப்படத்தில் நான் இயக்குநராக மட்டும் இருந்தேன்.இப்படத்தில் இயக்குநர் பொறுப்பை ஏற்றதோடு நானே நடித்திருந்ததாலும் படத்துக்கு தணிக்கையில் ஏ சான்ரிதழ் கிடைத்ததாலும் பயத்துடன் இருந்தேன்.ஆனால் முதல்காட்சியிலிருந்து இரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைப் பார்த்து மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியின் போது தனுஷின் நெருங்கிய நண்பர்கள், நம்ம டி ஜெயிச்சிட்டாரு இன்னைக்கு நைட் அவனுங்க ரெண்டு பேரும் தூக்கத்தைத் தொலைச்சிருப்பாங்க என்று பேசிக்கொண்டார்களாம்.
அவர்கள் பேச்சில் அடிபட்ட அந்த இரண்டு பேரில் ஒருவர் முன்னணி நடிகர் என்றும் இன்னொருவர் முன்னணி இசையமைப்பாளர் என்றும் திரையுலக வட்டாரங்களில் பேசிக்கொள்வதோடு அந்த இருவர் யார்?யார்? என்று ஆளாளுக்குப் பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.