சினிமா செய்திகள்

பொன்மாணிக்கவேல் படத்தில் இவ்வளவு சிக்கல்களா?

பிரபுதேவா நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் பொன்மாணிக்கவேல்.இப்படத்தில் பிரபுதேவா, முதன்முறையாகக் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.அவரிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய ஏ.சி.முகில்செல்லப்பன் இயக்குகிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். சுரேஷ் மேனன், பிரபு, கு.ஞானசம்பந்தன், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் சதுரங்க வேட்டை படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பணியாற்றிய டி.சிவானந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணிகளைக் கவனிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டதாம்.

அதேசமயம் இப்படத்துக்காக டி.இமான் உருவாக்கிய புதிய பாடல் ஒன்றின் படப்பிடிப்பு இன்னும் நடத்தப்படாமல் இருக்கிறதாம்.

தபாங் 3 இந்திப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் இந்தப்படத்தின் பாடல் காட்சியைப் படமாக்கத் தேதி கேட்டபோது உடனே கொடுத்தாராம் பிரபுதேவா.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் அவர் கொடுத்த தேதிகளைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டது என்கிறார்கள். பொருளாதார நெருக்கடி காரணமாகவே படப்பிடிப்பு நடத்தவில்லை என்று சொல்லப்படுகிறது,

படத்தில் பணியாற்றிய பலருக்கும் சொன்னபடி சம்பளம் கொடுக்கப்படவில்லை, தான் தேதி கொடுத்தும் படப்பிடிப்பு நடக்கவில்லை ஆகிய விசயங்களால் தயாரிப்பு நிறுவனத்தின் மீது பிரபுதேவா கடுப்பில் இருக்கிறாராம்.

அதனால் அவர் இன்னும் குரல்பதிவு செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இசையமைப்பாளர் டி.இமானும் படக்குழு மீது அதிருப்தி அடைந்திருக்கிறாராம். கிராம வாழ்க்கையின் பெருமைகளைக் கூறும் வகையில் போங்கு போங்கு எனத் தொடங்கும் பாடலைப் பதிவு செய்து கொடுத்திருக்கிறார்.

கபிலன் எழுதியுள்ள அந்தப்பாடலை மலேசியாவைச் சேர்ந்த
லாரி ஓட்டும் தொழிலாளர் தியாகராஜா சுப்பிரமணியம் என்பவர் பாடியிருக்கிறார்.

அப்பாடலில்….

உழைப்பாலே வரும் வேர்வைக்கு முன்னே
நயாகரா ஒண்ணுமில்லடா

சரியா சொல்லப்போனா
நகர வாழ்க்கை ஒண்ணும் வேணா

ஒழச்சாலுமே
ஒரு ஓலை வீடு
ரெண்டு காளை மாடு
இங்கே போதும்

நகரம் நகரம்தான்
தகரம் தகரம்தான்
எடைக்கு நீ தூக்கிப்போடு

கிராமம் கிராமம்தான்
உனக்கும் எனக்கும்தான்
சந்தோச எல்லைக்கோடு

பொம்மனாட்டி ஆம்மனாட்டி
கதை சொன்னேன் ஒருவாட்டி
விவசாயி ஒருவன் தான்
வயித்துக்கே வழிகாட்டி

இப்படி கிராமத்தின் பெருமைகள் பேசும் பல கருத்துகள் இருக்கின்றனவாம்.

இப்பாடல் இன்னும் படமாக்கப்படவில்லை என்பதால் பிரபுதேவா டி.இமான் ஆகியோர் இன்னும் கூடுதல் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

இவர்களை எதிர்கொள்ள முடியாமல் இயக்குநர் முகில் தடுமாறிக் கொண்டிருக்கிறாராம்.

Related Posts