செய்திக் குறிப்புகள்

ஆறுராஜா ஓர் ஆகச்சிறந்த கலைஞன் – மருத்துவர் தாயப்பன் வாழ்த்து

கலை இயக்குநர் தோட்டாதரணியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆறுராஜா. சந்திரமுகி படத்தில் இடம்பெறும் சந்திரமுகியின் ஓவியத்தை வரைந்தவர். அவர் இப்போது கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்து ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். அப்படத்தின் பெயர் பாப்பிலோன்.

கதாநாயகியாக சுவேதா ஜோயல் நடிக்க, மறைந்த குணச்சித்திர நடிகர் கிருஷ்ணமூர்த்தி, பூ ராமு, வினோத், அபிநயா, சவுமியா, ரேகா சுரேஷ் மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சனவரி 11 ஆம் நாள் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நக்கீரன் கோபால்,மருத்துவர் தாயப்பன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், மதியழகன், தயாரிப்பாளர்கள் சங்க (கில்டு) செயலாளர் ஜாக்குவார் தங்கம், நடிகைகள் மதுமிதா, கோமல் சர்மா, ஸ்ருதி ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் அனைவரையும் வரவேற்று இயக்குநர் ஆறு ராஜா பேசும்போது,

இளம்பெண்கள் கயவர்கள் சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என அவ்வப்போது செய்திகள் வெளியாவதுண்டு. குறிப்பாக தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம். இதுபோன்ற நிகழ்வுகள் எதனால் அதிக இடங்களில் நடக்கிறது. இதற்கு என்ன காரணம், இதற்கு என்னதான் முடிவு எனப் பல கேள்விகளை உள்ளடக்கி நிஜ சம்பவங்களை கருவாக வைத்து, அதேசமயம் அதில் சில மாற்றங்களோடு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன் எனக் கூறினார்.

சிறப்பு விருந்தினர் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் பேசும்போது….

பொதுவாக நான் சினிமா விழாக்களில் கலந்து கொள்வது கிடையாது. ஆனால் எனது நண்பரும் பொடா சட்டத்தில் என்னுடன் சிறையில் இருந்தவருமான டாக்டர் தாயப்பன், இந்தப்படம் குறித்தும், இந்தப் படத்தின் இயக்குநர் ஆறு ராஜா குறித்தும் கூறி, என்னிடம் அவரை அழைத்து வந்தார். அவரிடம் பேசியபோது தான், இந்த பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ஒரு படத்தை உருவாக்கியிருப்பதாகக் கூறி, இந்த விழாவிற்கு நீங்கள் வந்தால் பொருத்தமாக இருக்கும் எனக் கேட்டுக்கொண்டார்.

சமூக விழிப்புணர்வு சார்ந்த விழா என்பதாலும், பலபேருக்கு இந்தச் செய்தி சென்றடைய வேண்டும். இது போன்ற
சமுதாயச் சிந்தனை கொண்ட வளரும் இயக்குநருக்கு, ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த விழாவில் நான் கலந்து கொண்டேன்.

பெண்களை ஏமாற்றி, அவர்களை மிரட்டி, பாலியல் வன்முறை செய்த கும்பல் குறித்து, பொள்ளாச்சியிலிருந்து முதலில் இரண்டு வீடியோக்கள் எனக்கு வந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு ஈரக்குலையே நடுங்கி விட்டது. அதன் பின்னணி குறித்து விசாரிக்கும் போதுதான். அந்த அயோக்கியர்களுக்கு பக்கபலமாக அரசியல் புள்ளிகள் இருப்பதும் தெரிய வந்தது.அவற்றை வெளிக்கொணர்ந்தோம். அதன்பிறகு அந்த வழக்கைத் திசை திருப்ப காவல்துறையில் இருந்து என்னென்னவோ முயற்சிகள் செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்றது.அதற்குப் பிறகு சிபிஐ வசம் சென்றது.

அதன்பின்னர் என்ன ஆனதோ தெரியவில்லை, இரண்டு வருடங்களாகக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்போது அதிமுக பிரமுகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அப்போதே நாங்கள் சொன்னோம். இனியாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் விதமாக, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான், என்னுடைய எண்ணம்.

இது போன்ற படங்களின் மூலம், பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வுக் கருத்தை, தனது முதல் படத்திலேயே கூறியுள்ள இயக்குநர் ஆறு ராஜா அவர்களுக்கு, எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பயப்படாதவர்களையும், வீரர்களையும், கொரோனா தாக்காது என்று இங்கே ஜாக்குவார் தங்கம் பேசினார். என்னை யாருக்கும் பயப்படாதவர், வீரர் என்றும் அவர் கூறினார். ஆனால் என்னையும் கொரோனா தாக்கியது. நானும் 15 நாட்கள் சிகிச்சை பெற்று, ஓய்வு எடுத்து தான், அதிலிருந்து மீண்டு வந்தேன்

இவ்வாறு அவர் பேசினார்.

மருத்துவர் தாயப்பன் பேசும்போது….

ஆறுராஜா ஓர் ஆகச்சிறந்த கலைஞன். அவர் வரைந்து கொடுத்த பெரியார் அம்பேத்கர் ஓவியங்களைப் பாராட்டதோர் இல்லை. சந்திரமுகி என்கிற படத்தின் அடையாளமாய் அவருடைய ஓவியம் இருக்கிறது. ஆங்கிலப்படங்களில் இதுபோன்றவை அடையாளங்களாய் மாறுவதுண்டு. தமிழில் இதுதான் ஓர் அடையாளமாய் மாறிநிற்கிறது.

அவர் நான் நடித்து இயக்கி ஒரு படம் இயக்கப்போகிறேன் என்று என்னிடம் சொன்னபோது அரசியலுக்குப் போகத் திட்டமா? என்றுதான் கேட்டேன். அதன்பின்னர் அந்தப்படத்தின் கதை மற்றும் அவருடைய நல்ல நோக்கங்களை அறிந்து அவரைப் பாராட்டினேன்.

இன்றைக்குச் சில பெரிய கதாநாயகர்களைச் சுற்றியே திரையுலகம் இருக்கிறது. பெரிய கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் அமைந்துள்ள காட்சிகள் காணச் சகிக்கவில்லை.

இப்படியான காலத்தில் சமுதாய அக்கறையுடன் படமெடுத்திருக்கும் ஆறுராஜாவுக்கு என் வாழ்த்துகள்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts