தமிழ்ப்படங்களுக்குப் புதிய சந்தையை உருவாக்கும் எஸ்.ஆர்.பிரபு – திரையுலகினர் பாராட்டு

2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்த இந்தப்படம் வசூலில் சாதனை மட்டுமன்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது.
தென்னிந்திய மொழிகளில் பல சாதனைகளைச் செய்த ‘கைதி’, இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது.
கைதி 2 எப்போது? என்று திரைப்பட இரசிகர்கள் ஆர்வமாகக் கேட்பதும் தொடர்கிறது.
இந்நிலையில், தற்போது ‘கைதி’ படத்துக்கு மற்றுமொரு மகுடம் கிடைத்துள்ளது.
இப்படம், இரஷ்ய மொழியிலும் குரல்மாற்று செய்யப்பட்டு மார்ச் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அங்கு இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்குமென்றும் அவ்வாறு அமையும் பட்சத்தில் தமிழ்ப்படங்களுக்கு இன்னொரு சந்தை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதென்றும் சொல்கிறார்கள்.
இரஷ்யா போன்றதொரு பெரிய நாட்டில் தமிழ்ப்படங்களை வாங்கித் திரையிடும் வாய்ப்பு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்தத் திரையலகுக்கும் நன்மை பயக்கும் செயல்.
இதைத் தொடங்கி வைத்திருக்கும் ட்ரீம்வாரியர் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவைப் பலரும் பாராட்டுகிறார்கள்.