நடுங்க வைத்த நயன்தாரா – மனம் நொந்த படக்குழு
நடிகை நயன்தாரா தற்போது புது இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு நயன்தாரா -75 என தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் வேலைகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. அதன்பின் விட்டுவிட்டு படப்பிடிப்பு நடந்து இப்போது நிறைவை எட்டியிருக்கிறது.
இந்தப்படத்தில் ஜெய் கதாநாயகன் என்றாலும் நயன்தாராவை முன்னிலைப்படுத்தியே சொல்லப்படுகிறது. நயன்தாரா 75 என்றே பெயரும் வைத்துள்ளனர்.
இவ்வளவு பெருமைகளை நயன்தாராவுக்குக் கொடுத்திருக்கின்றனர் படக்குழுவினர். ஆனால் அவர்களுக்கு பல வகையிலும் தொல்லைகளையே திருப்பிக் கொடுத்திருக்கிறார் நயன்தாரா.
முழுக்க கதை கேட்டு பிடித்ததால்தான் நடிக்கவே ஒப்புக்கொண்ட நயன்தாரா, படப்பிடிப்புத்தளத்துக்கு வந்து பலவற்றை மாற்றச் சொல்லியிருக்கிறார். சிலவற்றை வேண்டாமென்றிருக்கிறார். அவர் மட்டுமின்றி அவருடைய கணவர் விக்னேஷ்சிவனின் தலையீடும் அதிகமாக இருந்திருக்கிறது.
அதுமட்டுமின்றி பல காட்சிகளில் நடிக்க மறுத்ததுடன், இந்தக்காட்சியில் முழு உருவம் எதற்கு? வெறுமனே கை அசைப்பது போல் வையுங்கள்,அதையும் வேறொருவரை வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.சில நேரங்களில் அதை மறுத்தாலும் பல நேரங்களில் அவர் சொன்னதையே செய்யும்படி ஆகிவிட்டதாம்.
இந்தக் காரணங்களால் இயக்குநர் நீலேஷ்கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் மனம் நொந்திருக்கின்றனராம்.இனி வாழ்நாளில் நயன்தாராவோடு இணைந்து படமே செய்யக்கூடாது என்று எல்லோரும் எண்ணுமளவுக்குச் சோதனை கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.
ஆனாலும் படம் நிறைவடையும் வரை இதை வெளியில் சொல்லக்கூட முடியாது என்பதால் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.
நல்ல நடிகை என்று பெயரெடுத்த நயன்தாரா நம்பிவந்த படக்குழுவை இப்படிச் சோதிக்கலாமா?











