சினிமா செய்திகள்

மூத்த நடிகையுடன் ஜோடி சேரும் தனுஷ் ஏன்?

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் அசுரன்.இந்தப்படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க மஞ்சு வாரியரைத் தேர்வு செய்துள்ளனர். இவர் தனுஷை விட 5 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகை அவர்.

இப்போது முதல் தடவையாக அசுரன் படத்தின் மூலம் தமிழ்ப் பட உலகுக்கு அறிமுகமாகிறார்.

மஞ்சு வாரியர் மலையாளத்தில் நடித்து வசூல் குவித்த ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படம் தமிழில் ‘36 வயதினிலே’ என்ற பெயரில் ஜோதிகா நடித்து வெளிவந்து வரவேற்பைப் பெற்றது.

மஞ்சு வாரியரும், மலையாள நடிகர் திலீப்பும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இது என்னுடைய முதல் தமிழ்ப்படம் தனுசுடன் அசுரன் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் நன்றி, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் என்று மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.

மூத்த நடிகையான மஞ்சுவாரியரை தேர்ந்தெடுத்தக் காரணம், படத்தில் நாயகியின் பாத்திரம் மிகவும் வலிமையானதாக அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதற்கு அழகும் நடிப்புத்திறமையும் உள்ள நடிகை வேண்டுமென்று தேடியதில் இவர் கிடைத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Related Posts