மாஸ்டர் – திரைப்பட விமர்சனம்
கல்லூரிப் பேராசிரியராகச் சென்னையில் பணிபுரியும் விஜய், நாகர்கோயிலில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு ஆசிரியராகச் செல்ல வேண்டிய கட்டாயம்.
போனபின் அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் பொங்கியெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லுவதுதான் மாஸ்டர்.
வித்தியாசமான வேடங்களை ஏற்காமல் ஒரேமாதிரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டைப் போக்க இந்த வேடத்தை விஜய் ஏற்றுக்கொண்டிருக்கிறார் போலும். தனக்கென ஓர் அக உலகத்திலேயே சஞ்சரிக்கும் அவரை யாராவது உசுப்பிவிட்டால் நிகழ்காலத்துக்கு வருகிறார் என்பதாக அவருடைய பாத்திரப்படைப்பு இருக்கிறது. அதை உணர்ந்து அதற்கேற்ப நடிக்க முயன்றிருக்கிறார் விஜய்.
ஆனால் மக்கள் பார்வையில் அவர் முழுநேரக்குடிகாரர். விஜய் இப்படி நடிக்கலாமா? என்கிற கண்டனங்கள் திரையரங்கில் எழுகின்றன.
விஜய்சேதுபதியும் அவரும் தோன்றும் காட்சிகளில் விஜய்சேதுபதி தன்னை முந்திவிடக்கூடாது என்பதற்காகக் கூடுதல் கவனம் எடுத்திருக்கிறார்.
காதல்கோட்டை, புன்னகைமன்னன், பிரேமம்,டைட்டானிக் ஆகிய படங்களின் கதையைச் சொல்லுமிடங்கள், நாகர்கோயிலிலிருந்து கொண்டு சென்னையில் ஆபத்தில் இருக்கும் கதாநாயகியைக் காப்பாற்ற வேண்டிய இறுக்கமான காட்சியை ஓர் சிறுவன் அலட்சியமாக நகைச்சுவைக் காட்சியாக்கிவிடும் நேரத்தில் விஜய் காட்டும்,எதிர்வனையும் விஜய்சேதுபதி முன்னால் வித்தியாசமாகச் சிரிப்பதும் அவருடைய சிறப்பு.
விஜய்சேதுபதியிலிருந்துதான் படமே தொடங்குகிறது. அவர் வலிமையான வில்லன் என்று சொல்வதற்காகவே பல காட்சிகள் இருக்கின்றன.பெரும்பாலான காட்சிகளில் அவர் சும்மா வந்து போனாலும் தன்னுடைய முத்திரைகளைப் பதிக்கத் தவறவில்லை. சில காட்சிகளில் தனியாகத் தெரிய வேண்டும் என மெனக்கெட்டிருக்கிறார்.விஜய்யுடனான காட்சிகளில் முந்தி நிற்கிறார்.
நாயகி மாளவிகாமோகனனுக்குப் பெரிதாக வேலையில்லை. ஒரு காதல் பாடலைத் தனியாகக் கொடுத்திருந்தாலாவது ஆறுதலாக இருந்திருக்கும்.
அர்ஜுன் தாஸ், சாந்தனு, கெளரிகிஷன், ஆண்ட்ரியா, நாசர் உட்பட படத்தில் நிறைய நடிகர்கள் இருந்தாலும் அர்ஜூன் தாஸ் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோருக்குத்தான் சொல்லிக்கொள்ளத் தக்க வேடங்கள்.
அனிருத் பின்னனி இசைக்காகப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. வாத்தி கமிங் பாடலின் இசையையே பெரும்பாலான காட்சிகளில் பின்னணி இசையாக்கிவிட்டார். காலம் கடந்து ஒலிக்கிற மாதிரி ஒரு பாடல் கூட இல்லை.
சத்யன்சூர்யனின் ஒளிப்பதிவு நன்று. இருளில் படமாக்குவது அவருக்குக் கைவந்த கலை. அதை சரியாகச் செய்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜுக்கு நிறைய வேலை இருக்கிறது. அவரைச் செயல்படவிடவில்லையா? அவரே செயல்படவில்லையா? எனத் தெரியவில்லை. சுமார் நாற்பது நிமிடங்கள் குறைத்தாலும் இந்தக்கதை கெட்டுப்போய்விடாது என்பதுதான் உண்மை.
சண்டைப்பயிற்சி அமைத்திருக்கும் ஸ்டண்ட் சில்வா, விஜய்யும் விஜய்சேதுபதியும் மோதும் சண்டையில் மிக நுட்பமாக விஜய்சேதுபதியின் வலதுகை விஜய்யைத் தாக்காமல் பார்த்துப் பார்த்து வடிவமைத்திருக்கிறார். பலம் பொருந்திய அந்தக்கையால் தாக்கப்பட்ட பிறகு அதன் அடையாளத்தை விஜய் உடலில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் விஜய்சேதுபதி ஆகிய இருவரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திரைக்கதையில் பல தொய்வுகளை ஏற்படுத்திவிட்டார் லோகேஷ் கனகராஜ். விஜய் இதையெல்லாம் எளிதாகச் செய்வார் என்று மக்களுக்குத் தெரியும் இடங்களிலெல்லாம் திரைக்கதைக்குள் விஜய்யை அடைத்துவைத்து சலிப்பை ஏற்படுத்துகிறார்.
விஜய் படப்பாடல்களுக்கென்று ஓர் இடம் மக்களிடம் உண்டு அதையும் இல்லாமல் செய்து அவருடைய படங்களில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சிகளையும் இல்லாமல் செய்து விட்டு அவற்றை மறந்து படத்தை இரசிக்க வைக்கும் கலையும் கைவராமல் சோதித்துவிட்டார்.
எல்லாவற்றையும் தாண்டி விஜய்யும் விஜய்சேதுபதியும் படத்தைக் காப்பாற்றுகிறார்கள்.











