முதல்வரிடம் பாராட்டுப் பெற்ற பாடலாசிரியர்
கொரோனா தாண்டவத்திக்குப் பிறகு திரைப்படங்களின் வரவு குறைந்திருந்தாலும் ஆல்பம் பாடல்கள் எனப்படும் தனிப்பாடல்கள் வெகுவாக வெளிவந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
வைரமுத்துவே தனிப்பாடல்கள் பக்கம் தன் பேனா முனையினை திருப்பி நாட்படுதேறலில் நனைய விட்டிருப்பது காலத்தின் கட்டாய மாற்றத்தை குறிக்கிறது.
இந்த 2021 ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கான தனிப்பாடல்கள் வெளிவந்திருந்தாலும் அதில் சமூக நல்லிணக்கம் பால் குரல் கொடுத்து ஒலித்தது சிலவே.
அந்த வரிசையில் திருநங்கைகள் குறித்த பாடலிலும் கொரோனா பெருந் தொற்றதில் பெற்றோரை இழந்து வாடும் மழலைகளின் பாடலிலும் வெகுவாக்க் கவனம் ஈர்க்கிறார் கவிஞர் செந்தமிழ்.
அண்ணாத்த புகழ் திருமூர்த்தியின் குரலில் ஷாஜஹான் இசையில் உருவான திருநங்கை பாடலை கேட்டு வெகுவாகப் பாராட்டியுள்ளார் தமிழ்நாடு வளர்ச்சி மன்ற உறுப்பினர் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ்.

மேலும் இப்பாடலை அரங்கேற்றம் செய்யப போவதாகவும் நார்த்தகி தெரிவித்திருப்பதாக அப்பாடல் குழுவினர் தெரிவித்துள்ளனர்
தமிழ்நாட்டில் திருநங்கை என்ற பெயரை முதன் முதலில் பயன்படுத்தியவர் இவர். மேலும் மதிப்புறு முனைவர், கலைமாமணி மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் திருநங்கையும் இவரே ஆவார். தமிழ்நாடு அரசின் பதினொன்றாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் நர்த்தகி நடராஜ் வாழ்க்கை பாடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்கள் பெற்றோரை இழந்த 2000 க்கும் மேற்ப்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் கர்நாடகா ‘ஸ்பார்ஷா’ பராமரிப்பு இல்லத்துக்காக அண்மையில் ஒரு பாடல் உருவானது.
ஸ்பார்ஷா மந்த்ரா எனப்பெயரிடப்பட்ட “யார் அறிவார்” என்ற பாடலுக்கு இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ரவிப்ரியன் இசையமைக்க, வரி(லி)களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் செந்தமிழ்.
கண்ணம்மா பாடல் புகழ் ஜோதி கலை பாடலைப் பாடியதோடு மட்டுமல்லாது சோலோ வயலினும் வாசித்துள்ளார்.
இந்த இரண்டு பாடல்களும் மாற்றுத் திறனாளிகள் பாடியிருப்பது தனிச்சிறப்பு.
காதல் சார்ந்த தனிப்பாடல்கள் வெற்றி பெறுவதைக்காட்டிலும் சமூக அக்கறையோடு வரும் பாடல்கள் வெற்றி பெரும் போதுதான் சமூகத்தில் புது புத்துணர்வும் மக்களிடையே உயிர் நேயமும் தழைத்தோங்கும் என்கிற பாடலாசிரியர் செந்தமிழின் கவிதை நூல்கள் பச்சையப்பன் கல்லூரியில் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் பாராட்டும் பெற்றிருக்கிறது.
இவற்றால் பாடலாசிரியர் செந்தமிழுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.











