சினிமா செய்திகள் நடிகர்

கர்நாடகத்தில் காலா வெளியாகுமா? – ரஜினி பரபரப்பு பதில்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் திரையுலகினரின் மவுனப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தொடங்கியது.

இதில், நடிகர் சங்கத் தலைவர் நாசர்,விஷால், நடிகர்கள் விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்படும் முன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது….

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும்.

கால் ஏக்கர், அரை ஏக்கர், முக்கால் ஏக்கர் நிலங்களைக் கொண்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் காவிரி. தமிழக மக்களின் ஒரே குரல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான்.

காவிரி விசயத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி பேசிவருவதால், அவருடைய காலா படத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வருகிறது. அதைப் பற்றிக் கேட்டபோது, கர்நாடகாவில் எனது படம் வெளியாகாமல் போனால் தயாரிப்பாளர்கள் மற்றும் கர்நாடக அரசு அதனைப் பார்த்து கொள்வார்கள் என்று சொன்னார்.

மேலும் அவர் கூறியதாவது.. என்னுடைய எதிரி கமல் இல்லை, ஏழ்மை, லஞ்சம் மற்றும் வேலையின்மை. தமிழகம் காவிரிக்காக போராடும் தருணத்தில்,கர்நாடகத்தைச் சேர்ந்தவரை துணைவேந்தராக நியமித்திருக்கக்கூடாது.

காவிரி விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கறுப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும். ஐபிஎல் போட்டியை காணச் செல்லும் ரசிகர்களும், கறுப்புச்சட்டை அல்லது பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Related Posts