சினிமா செய்திகள்

மிஷ்கின் விட்ட சவால் – சாதிப்பாரா?

மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் படம் டிரெயின்.கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப்படத்துக்கு பெளசியா ஒளிப்பதிவு செய்கிறார்.மிஷ்கினே இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. சென்னையில் மிகப்பெரிய தொடர்வண்டி நிலைய அரங்கம் அமைத்து பெரும்பகுதிப் படத்தைப் படமாக்கியவர்கள், மேட்டுப்பாளையம் போய் தொடர்வண்டி நிலையத்தின் வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்களாம்.

எடுத்தவரை தொகுத்துப் பார்த்துவிட்டு தேவையெனில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்கிறார்கள்.

இதனிடையே இந்தப்படத்துக்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றிருப்பதால் மிஷ்கினுக்குப் பல்வேறு விமர்சனங்கள். அவர் இசையமைப்பாளராக அறிமுகமான முதல்படம் டெவில்.அப்படத்தின் பாடல்களும் வரவேற்பைப் பெறவில்லை பின்னணி இசையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்கிற விமர்சனங்கள் வந்தன.

அப்படியிருக்கும்போது அவருக்கு நன்றாக வரும் இயக்கத்தை மட்டும் கவனிக்காமல் சரியாக வராத இசையமைப்பையும் ஏற்க வேண்டுமா? என்கிற விமர்சனங்கள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன.

அவற்றைச் சவாலாக ஏற்றுக்கொண்டு தீவிரமாகப் பணியாற்றிவருகிறாராம் மிஷ்கின்.

இந்தத் திரைக்கதைக்குள் ஒரு பாடல் வைப்பதற்குத்தான் இடமிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அந்தப்பாடல் முழுமையாகத் தயாராகி படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

ஆனால், அதன்பின்னும் இரண்டு பாடல்களை உருவாக்கியிருக்கிறாராம் மிஷ்கின்.அவை படத்தில் இடம்பெறுமா இல்லையா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம் என்கிறார்கள்.

அப்படி இருக்கும்போது மேலும் பாடல்களை உருவாக்குவது ஏன் என்றால்?

பொதுவாக இசையமைப்பாளர்களின் வெற்றி அவர்களின் பாடல்கள் மூலமே அளவிடப்படுகின்றன.எனவே,முதலில் தான் இசையமைக்கும் பாடல்களை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று நினைத்திருக்கிறார் மிஷ்கின்.

ஒரு பாடல் மட்டும் இருந்தால் போதாது ஒரு தொகுப்பாக இருந்தால்தான் அதற்குத் தனியாக வியாபாரம் இருக்கும் என்பதாலும் மேலும் சில பாடல்களை உருவாக்கத் திட்டமிட்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறாராம்.

பல பாடல்கள் இருந்தால் ஏதாவதொன்று வெற்றி பெற்று காப்பாற்றிவிடும் என்பது பொதுவான கணக்கு, ஆனால் மிஷ்கினோ,நான் அப்படியில்லை எல்லாப் பாடல்களையுமே வெற்றி பெறச் செய்வேன் என்று முதல்படத்தில் கிடைத்த விமர்சனங்களுக்கு நேர்மாறாக இந்தப்படத்தில் எல்லாப் பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன என்று பாராட்டுப் பெறுவேன் என்று சவால் விட்டுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறாராம்.

இயக்குநராகத் தனித்துவத்தை நிறுவி வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் மிஷ்கின் இசையமைப்பாளராகவும் வெற்றி பெறட்டும்.

Related Posts