என்னைப் பற்றி வந்த செய்திகளில் உண்மை இல்லை – கீர்த்திசுரேஷ் விளக்கம்
தமிழ்த்திரையுலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒருபடம் உருவாகி உள்ளது. தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் தமிழில் நடிகையர்திலகம் என்ற பெயரிலும் வெளியாக இருக்கிறது.
இப்படம் குறித்து சாவித்திரியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் கூறும்போது,
இந்தப்படம் பற்றி இப்போதுதான் முதன்முறையாகப் பேசுகிறேன். இப்படத்தின் இயக்குநர் எனக்கு 3 மணிநேரம் கதை சொன்னார். இதுவரைக்கும் எந்தப் படத்தின் கதையும் 3 மணி நேரம் கேட்டதில்லை. அவ்வளவு சிறப்பாக இருந்தது.
இப்படத்தின் கதையைக் கேட்டு உடனே நடிக்க சம்மதம் தெரிவிக்க வில்லை. நிறையக் கேள்விகள், சந்தேகங்கள் எழுந்தது. நிறைய நல்ல படங்களில் தற்போதுதான் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்நிலையில், சிறந்த நடிகையின் வாழ்க்கை எப்படி நடிப்பது, நிறைய பேருக்கு அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தெரியும். எப்படி நம்மால் நடிக்க முடியும் என்று நினைத்தேன். இயக்குநர்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தார்.
‘தொடரி’ படத்தைப் பார்த்துத்தான் இயக்குநர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ‘தொடரி’ படம் எனக்கு ஏதாவது நல்லது பண்ணும் என்று நடிக்கும் போது நினைத்தேன். ஆனால், அப்படம் வெளியான பிறகு சில பேர் வாழ்த்தினார்கள், பல பேர் குறை சொன்னார்கள். ஆனால், அந்தப் படம் தான் எனக்கு தற்போது ‘நடிகையர் திலகம்’ படத்தைக் கொடுத்திருக்கிறது.
இந்தப்படத்தில் நடிப்பதற்காக எடைகூடி குண்டானதாக செய்திகள் வந்தன. அதில் உண்மையில்லை. இதற்காக பல மணி நேரம் மேக்கப் போட்டோம். மிகவும் சிரமமாக இருந்தது.
மே 9 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவிருக்கிறது. உங்கள் அனைவருக்கும் இந்தப்படம் நிச்சயம் பிடிக்கும் என்றார்.










