வேறு படத்துக்குப் போன இயக்குநர் – விஷால் கோபம்
குட்டிப்புலி, கொம்பன் உட்பட பல படங்களை இயக்கிய முத்தையா, விஷால் நடிப்பில் மருது படத்தை இயக்கியிருந்தார்.
அந்தக்கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு படம் செய்ய பேச்சுவார்த்தை நடந்துவந்தது.
முத்தையா சொன்ன மையக்கதை விஷாலுக்குப் பிடித்திருந்தது. அதனால் அதனை முழுமையான திரைக்கதையாக எழுதுமாறு சொல்லியிருந்தாராம் விஷால்.
அந்தப்படத்தைத் தயாரிக்கச் சொல்லி ஒரு தயாரிப்பாளரிடம் விஷால் பேசியிருக்கிறார். விஷால் சொன்னதற்காக அந்தத் தயாரிப்பாளரும் படம் தயாரிக்க ஒப்புக்கொண்டிருந்தாராம்.
இந்நிலையில் விஷாலுக்கான திரைக்கதை என்று சொல்லிவிட்டுப் போன இயக்குநர் முத்தையா, திடீரென சன் நிறுவனத்துக்காக ஒரு படம் இயக்கும் வாய்ப்பு வந்ததும் அங்கே போய்விட்டார்.
விஷால் இப்போது சக்ரா படத்தை முடிக்கவிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஆனந்த்சங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். அதை முடித்துவிட்டு விஷால் வருவதற்குள் சன் நிறுவனத்தின் படத்தை முடித்துவிட்டு வரலாம் என்பது இயக்குநர் முத்தையாவின் கணக்கு.
விக்ரம்பிரபுவைக் கதாநாயகனாக வைத்து அந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் வேலைகள் நடந்துவருகின்றன.
இந்தத் தகவல் தெரிந்ததும் விஷால் கோபமாகிவிட்டாராம்.
நம் படத்துக்கான திரைக்கதை எழுதும் வேலையை விட்டுவிட்டு புதிய படத்துக்காகப் போய்விட்டார் என்பதால், அவர் இயக்கத்தில் நடிக்கவிருந்த திட்டத்தை இரத்து செய்துவிட்டாராம்.
முத்தையா படம் வேண்டாம் வேறு இயக்குநரைப் பார்க்கலாம் என்றும் சொல்லிவிட்டாராம்.











