கங்குவா படத்தில் நடிக்கிறார் கார்த்தி – என்ன வேடம் தெரியுமா?
சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் கங்குவா.சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்துக்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3 டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
கங்குவா முதல்பாகம் ஆயுதபூசை விடுமுறையையொட்டி அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ‘பையர் சாங்’ எனும் பாடல், ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் 43 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது.
ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்று ஆஸ்கர் விருது வரை சென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளதால் இந்தப் பாடலுக்கு இரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தின் முதல்பாகத்துக்கான படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று சொன்னார்கள்.இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டுத்தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொண்டார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி இன்னும் சில நாட்கள் நடக்கவிருக்கிறது.
படத்தை முழுமையாகத் தொகுத்துப் பார்த்துவிட்டு அதன்பின் சில காட்சிகள் தேவை என்பதற்காக பேட்ச் ஒர்க் என்று சொல்லப்பட்டு படப்பிடிப்பு நடக்கிறது.
ஆனால், விட்டுப்போன காட்சிகளை எடுப்பதற்கான படப்பிடிப்பு நடக்கவில்லை.புதிதாகவே எடுக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதில், கார்த்தி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் இறுதியில் சிறப்புத் தோற்றத்தில் சூர்யா தோன்றினார்.அது வெறும் சிறப்புத் தோற்றம் மட்டுமல்ல அடுத்த பாகத்துக்கான முன்னோட்டம் என்று சொல்லப்பட்டது.
அதேபோல் இந்தப் படத்தின் இறுதியிலும் கார்த்தி தோன்றுவாராம்.அவருடைய வேடம் அடுத்த பாகத்துக்கான முன்னோட்டமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
சூர்யா,கார்த்தி ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.அதுகுறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தது.
இப்போது கங்குவா முதல்பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் கார்த்தி நடிக்கிறார் என்பதும் அது அடுத்த பாகத்துக்கான முன்னோட்டம் என்பதாலும் கங்குவா 2 படத்தில் இருவரும் இணைந்து முழுப்படத்திலும் வருவார்கள் என்று சொல்லப்படுகிறது.
நடக்கட்டும் நடக்கட்டும் நன்றாக நடக்கட்டும்.











