ஜோதி – திரைப்பட விமர்சனம்
ஷீலா ராஜ்குமார், ராட்சசன் படபுகழ் சரவணன் ஆகிய இருவரும் ஆதர்ச தம்பதிகள். இவர்களில் சரவணன் ஒரு மருத்துவர். சொந்தமாக பெரிய மருத்துவமனை நடத்துகிறார்.
நான்கு நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கும் நிறைமாத கர்ப்பிணி ஷீலாவை விட்டுவிட்டு ஒரு முக்கிய அறுவைசிகிச்சைக்காக பெங்களூரு செல்கிறார் சரவணன். அன்றிரவு ஷீலாவுக்கு கட்டாய அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்துக் கொண்டு போய்விடுகிறார்கள் மர்மநபர்கள்.
அதிரவைக்கும் இச்செயலைச் செய்தது யார்? எதற்காகச் செய்தார்கள்? செய்தவர்களைக் கண்டுபிடித்தார்களா? என்பதைச் சொல்லியிருப்பதுதான் ஜோதி திரைப்படம்.
நாயகி ஷீலாவின் பெயர் ஜோதி என்பதால் படத்துக்கு ஜோதி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
அவரும் அந்த வேடத்துக்கேற்ப ஒளி கூட்டியிருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியாகப் புன்னகை தவழும் முகத்துடன் வலம்வரும் அவரா இப்படி விஸ்வரூபம் எடுக்கிறார் என வியக்கும் வண்ணம் நடித்திருக்கிறார்.
கடத்தப்பட்ட குழந்தையைக் கண்டுபிடிக்கும் காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்திருக்கிறார் நாயகன் வெற்றி. வேடத்துக்கேற்ப நடிக்க முயன்றிருக்கிறார்.
அவருடன் கூடவே வரும் தலைமைக்காவலர் குமரவேல் வேடமும் அவருடைய நடிப்பும் படத்தை எளிதாக நகர்த்திச் செல்ல உதவுகிறது.
வெற்றியின் மனைவியாக நடித்திருக்கும் கிரிஷாகுருப், நன்றாக நடித்து படத்துக்குப் பலம் சேர்க்கிறார்.
பிறந்ததிலிருந்தே அது என் குழந்தையா இருக்கணும் என்கிற எண்ணம்தான் பல குற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது.
மருத்துவர்களாக நடித்திருக்கும் சாய்பிரியாரூத் (படத்தில் சாந்தி), பூஜிதாதேவராஜ் (படத்தில் காமினி) ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.
ஓட்டுநர் ரங்காவாக நடித்திருக்கும் ராஜாசேதுபதி, படத்தின் திருப்புமுனையாக இருக்கிறார்.
செசிஜெயாவின் ஒளிப்பதிவில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் அழகாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன.
ஹர்ஷ்வர்தன் ரமேஷ்வர் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம். கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் வருகிற இறுதிப்பாடல் சிறப்பு.
படத்தொகுப்பாளர் சத்யமூர்த்தியின் உழைப்பு படத்தை வேகமாக்கியிருக்கிறது.
இயக்குநர் ஏ.வி.கிருஷ்ண பரமாத்மா, பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியருக்கே பைத்தியம் பிடித்தால்
என்கிற வழிமுறையைக் கடைபிடித்து குழந்தைக் கடத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அதிரடிக்காட்சிகளை அமைத்திருக்கிறார்.
இந்தப்படம் பார்த்தால் குழந்தைக் கடத்தல்காரர்களுக்குப் பயம் வரும்.











