பிரசாந்தின் ஜானி பட டீசரை மணிரத்னம் வெளியிட்டது ஏன்?
புதுஇயக்குநர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்திருக்கும் படம் ஜானி.
இந்தப்படத்தை ‘ஸ்டார் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் நடிகர்தியாகராஜன் தயாரித்துள்ளார்.
இந்தப்படத்தில் பிரசாந்துடன் சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, பிரபு, ஆனந்த்ராஜ், அஷுதோஷ் ராணா, சாயாஜி ஷிண்டே, தேவதர்ஷினி, சந்தியா உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 27 அன்று இப்படத்தின் டீஸரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்.
ஒரு சில சமூக கருத்துக்களையும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மாதிரியும் அமைந்துள்ள கதைக்களத்தை கொண்ட இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது.
பிரசாந்த் நடிக்கும் படம் என்றால் அதில் டான்ஸ், ஃபைட், காமெடி என்று எல்லா கமர்ஷியல் விஷயங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். ஆனால் இப்படத்தில் பாடல்கள் இல்லை. இந்த கதையில் பாடல்களுக்கான இடம் இல்லாததால் பாடல்களை தவிரித்திருக்கிறோம். ‘ஜானி’ பிரசாந்துக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று படக்குழுவினர் சொல்கிறார்கள்.
தியாகராஜன் இப்படம் பற்றிப் பேசும்போது, படப்பிடிப்பு வேலைகளும், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் முடிவடைந்த ‘ஜானி’ விரைவில் தணிக்கைக் குழுவினர் பார்வைக்கு செல்லவிருக்கிறது.
தணிக்கை முடிந்ததும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும்.
கலை இயக்கத்துக்கு மிலன், ஒளிப்பதிவுக்கு பன்னீர் செல்வம், சண்டை பயிற்சிக்கு சுப்ரீம் சுந்தர் என்று பல முன்னனி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ள ‘ஜானி’ அனைவருக்குமான படமாக அமைந்துள்ளது.
மணிரத்னத்தோடு பல ஆண்டுகளுக்கு முன் திருடா திருடா படத்தில் பிரஷாந்த் பணியாற்றினார். அப்போதிருந்து பிரஷாந்த் மேல் தனிப்பிரியம் வைத்திருக்கும் மணிரத்னம், இப்படத்தின் டீசரை வெளியிட வேண்டும் என்று கேட்டவுடன் ஒப்புக்கொண்டார். அவர் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொள்ளமாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். டீசர் மிக நன்றாக இருக்கிறதென்று பாராட்டினார் என்றார் தியாகராஜன்.











