சினிமா செய்திகள்

மோகன்லாலின் புதிய படம் த்ரிஷ்யம் 2 – படப்பிடிப்பு குறித்த ஆச்சரிய தகவல்

2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளிலும் அந்தப்படம் மொழிமாற்று செய்யப்பட்டது. சீன மொழியில் மொழிமாற்று செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் ‘த்ரிஷ்யம்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் – ஜீத்து ஜோசப் இணைப்பில் ‘ராம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. கொரோனா ஊரடங்கினால் இதன் படப்பிடிப்பு தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளது. வெளிநாட்டில் படப்பிடிப்புக்கான சூழல் உருவானவுடன்தான் ‘ராம்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும்.

‘ராம்’ படத்துக்கு முன்னதாகவே, மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி இணைந்து ‘த்ரிஷ்யம் 2’ படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

மே 21 ஆம் தேதி மோகன்லால் பிறந்த நாளை முன்னிட்டு ‘த்ரிஷ்யம் 2’ படம் குறித்த அறிவிப்பை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.இப்படத்துக்காக மோகன்லால் நடிக்கவிருப்பது 17 நாட்கள் மட்டுமே என்கிறார்கள்.

அந்த 17 நாட்கள் மொத்தப் படப்பிடிப்புக் குழுவும் ஒரே இடத்தில் தங்கி மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு வீடு திரும்பத் திட்டமிட்டுள்ளனராம்.

அதன்பின் மோகன்லால் இடம்பெறாத காட்சிகளின் படப்பிடிப்பு சில நாட்கள் நடக்கும் என்கிறார்கள்.

கேரளத் திரையுலக வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற பெருமையைப் பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சரியான திட்டமிடலுடன் மிகக்குறைந்த நாட்களில் படமாக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.

Related Posts