சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஜெயம்ரவி விதித்த 4 நிபந்தனைகள்
சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம்ரவி,ஸ்ரீலீலா,அதர்வா ஆகியோர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
இப்படத்தை தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிக்கடை படத்தைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களை விடப் பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
இப்படத்தில் ஜெயம்ரவி வில்லனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.ஆனால் இந்தப்படத்தில் இன்னொரு நாயகன் போல அவரும் இருப்பார் என்று சொல்கிறார்கள்.
அதனால் இப்படத்தை ஒப்புக்கொண்டதோடு மேலும் நான்கு முக்கிய நிபந்தனைகள் விதித்திருக்கிறார் ஜெயம்ரவி.அவற்றைப் படக்குழு ஏற்றுக்கொண்டதால் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
அவருடைய நிபந்தனைகள்..
1.இந்தப்படத்தில் நடிக்க நான் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க வேண்டும்
2.சிவகார்த்திகேயன் என்னை அடிப்பது மாதிரி காட்சி இருக்கக்கூடாது
3.தேதிகள் விசயத்தில் கட்டாயப்படுத்தக் கூடாது
4.விளம்பரங்களில் சிவகார்த்திகேயனுக்குச் சமமாக முக்கியத்துவம் இருக்க வேண்டும்
ஆகிய நிபந்தனைகளை அவர் விதிக்க அவற்றை படக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தப்படத்தில் ஜெயம்ரவி இருபத்தைந்து முதல் முப்பது நாட்கள் வரைதான் நடிக்க வேண்டியிருக்குமாம்.அதற்காக அவர் கேட்டது பெரும் தொகை.அதைக் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டதாம்.
திரைக்கதையில் சிவகார்த்திகேயனுக்கு இணையான வேடம் என்பதைச் சொன்னதோடு நில்லாமல் முழுமையான திரைக்கதையை ஜெயம்ரவிக்குக் கொடுத்து படிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.அவர், தான் படித்ததோடு நில்லாமல் தன் தந்தை உட்பட நெருக்கமான சிலரிடம் கொடுத்து அவர்களின் கருத்தையும் கேட்ட பின்பே நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
ஜெயம்ரவி நடிப்பில் அடுத்து டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார்.டிசம்பர் மாத மத்தியில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.அதனால் அதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்பும் இருக்கக்கூடும் என்பதால், தேதி விசயத்தில் நெருக்கடி தரக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்.
விளம்பரங்களிலும் சிவகார்த்திகேயனுக்கு இணையாக ஜெயம்ரவியும் இடம்பெறுவார் என்கிற உறுதியை இயக்குநர் சுதா கொங்கரா கொடுத்திருக்கிறாராம்.
இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கலாம் என்று சொல்கிறார்கள்.
இயக்குநர் சுதா கொங்கராவைப் பொறுத்தவரை முன் தயாரிப்புப் பணிகள் மற்றும் பின் தயாரிப்புப் பணிகளுக்குக் கூடுதல் நாட்கள் எடுத்துக் கொள்வார் என்றாலும் படப்பிடிப்பை வெகு சீக்கிரமாக முடித்துவிடுவார் என்பதால் படத்தில் நடிக்கும் அனைவருக்குமே எவ்வித நெருக்கடியும் இருக்காது என்றும் சொல்கிறார்கள்.
நல்லபடியாக நடக்கட்டும்.











