சினிமா செய்திகள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி?

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பிரதர்.இப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பிரதர் படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் அர்ஜுனன் ஜே.ஆர் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி.

இவற்றோடு அவருடைய அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படம் அறிவிக்கப்பட்டுள்ளது.அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை எப்போது தொடங்கும் என்பதும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

அதோடு ஸ்கிரீன்சீன் நிறுவனத்தின் தயாரிப்பில் டாடா பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘ஜெ ஆர் 34’ என்று அழைக்கப்படும் ஜெயம் ரவியின் 34 ஆவது படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளது. ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஜெயம் ரவி உடன் ஸ்கிரீன் சீன் நிறுவனம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘பிரதர்’ திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் ‘ஜெ ஆர் 34’ திரைப்படத்திற்காக ஸ்கிரீன் சீன் மீடியா மற்றும் ஜெயம் ரவியுடன் ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கைகோர்க்கிறார்.

டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இதில் நடிக்க உள்ள முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்களை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் விரைவில் அறிவிக்கும்

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்போது மேலும் இரண்டு புதியபடங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ஜெயம்ரவி.பிடிஜி யுனிவர்சல் நிறுவனம்தான் அடுத்து ஜெயம்ரவியைக் கதாநாயகனாக வைத்து இரண்டு படங்களைத் தயாரிக்கவிருக்கிறது.இதுகுறித்து அந்நிறுவனம் அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இவை இல்லாமல் இப்போது இன்னொரு புதியபடத்தில் ஜெயம்ரவி நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல் திரையுலக வட்டாரத்தில் உலா வருகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஜெயம்ரவி ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனமே தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இப்போது சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.அப்படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் ஜெயம்ரவி படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து இரண்டு தரப்பிலும் விசாரித்தால், அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்று சொல்கிறார்கள்.

பேச்சோடு நிற்குமா? செயலுக்கு வருமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Related Posts