ஜெயம்ரவி நடிக்கும் இரண்டு புதியபடங்கள் – விவரம்
ஜெயம்ரவி நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பிரதர்.இப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பிரதர் படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் அர்ஜுனன் ஜே.ஆர் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி.
இவற்றோடு அவருடைய அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படம் அறிவிக்கப்பட்டுள்ளது.அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை எப்போது தொடங்கும் என்பதும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
அதோடு ஸ்கிரீன்சீன் நிறுவனத்தின் தயாரிப்பில் டாடா பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.அடுத்து அப்படத்தின் படப்பிடிப்புதான் தொடங்கவுள்ளது என்கிறார்கள்.
இந்நிலையில் இப்போது மேலும் இரண்டு புதியபடங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ஜெயம்ரவி.
அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படம் டிமாண்டி காலனி 2.அஜய்ஞானமுத்து இயக்கிய அந்தப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்த அந்தப்படத்தை வாங்கி வெளியிட்ட நிறுவனம் பிடிஜி யுனிவர்சல் நிறுவனம்.
அந்நிறுவனம் இப்போது வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் மற்றும் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கும் ரெட்டதல ஆகிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவற்றில்,வைபவ் நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படம் முழுமையாகத் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கிறது.ரெட்ட தல படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிறுவனம் திரையுலகுக்குள் நுழைந்து வாங்கி வெளியிட்ட முதல்படமே பெரிய வெற்றி நல்ல இலாபம் என்பதால் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்கும் முடிவில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நிறுவனம்தான் அடுத்து ஜெயம்ரவியைக் கதாநாயகனாக வைத்து இரண்டு படங்களைத் தயாரிக்கவிருக்கிறது.
அவ்விரண்டு படங்களில் ஒரு படத்தை புது இயக்குநர் அருள் சக்தி முருகன் என்பவரும் இன்னொரு படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்றும் அவை சுமுகமாக முடிவடைந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும் என்றும் சொல்கிறார்கள்.
ஒருவேளை அந்த இயக்குநர்கள் சொல்லும் கதை ஜெயம்ரவிக்குப் பிடிக்கவில்லையெனில் இயக்குநர்கள் மாற்றம் இருக்கலாம் ஆனால் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயம்ரவி நடிப்பது மட்டும் உறுதி என்றாகியிருக்கிறது.











