காட் ஃபாதர் – திரைப்பட விமர்சனம்
அன்பான கணவன் மனைவி ஓர் அழகான குழந்தை, நல்ல வேலை சொந்தவீடு என்று மகிழ்ச்சியாக வாழும் நடுத்தர குடும்பத்துக்குள் ஒருநாள் பெரும்புயல் வீசுகிறது. அது அக்குடும்பத்திலுள்ள அழகான குழந்தையைக் காவு கேட்கிறது.
அந்த சாதாரண குடும்பம் அவ்வளவு பெரும்புயலை எப்படி எதிர்கொள்கிறது? என்பதைப் படபடப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் காட்ஃபாதர்.
நடுத்தர குடும்பத்தலைவன் வேடத்துக்கு மிகச் சரியாக இருக்கிறார் நாயகன் நட்டி. மனைவியிடம் கொஞ்சல் குழந்தையிடம் செல்லம் அடுத்தவர் பாதிப்பைக் கண்டு பதறும் மனம், கண் முன்னால் நடக்கும் கொடுமையைக் கண்டு கலங்கி நிற்பது என எல்லாக் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.
மகனைக் காக்கும் போராட்டத்தின் போது பார்ப்பவர்களையும் பதட்டப்படுத்துகிறார்.நீங்க எத்தனை பேர் இருக்கீங்கன்னு தெரியாது ஆனா நீங்க இருக்கிறது என் வீடுடா எனும்போது கெத்து காட்டுகிறார் நட்டி.
நாயகி அனன்யா நல்ல தேர்வு. விசயம் தெரியாமல் பதறுவதும் தெரிந்ததும் நடுங்குவதும் என பொருத்தமாக நடித்திருக்கிறார்.
சிறுவன் அஷ்வத் பயந்து அழும்போது எதிரிகள் மீது கொலைவெறி வருகிறது.
வில்லனாக நடித்திருக்கும் லால், ஒரு ராட்சசன் போலவே தோன்றுகிறார்.காவல் அதிகாரியாக நடித்திருக்கும் மாரிமுத்துவின் நடவடிக்கை காவல்துறை மீது பயத்தை ஏற்படுத்துகிறது.
சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவு திரைக்கதையில் இருக்கும் பதட்டத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது.
நவீன்ரவீந்திரனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை திக் திக் கென வைத்திருக்கிறது.
ஒருவரிக்கதையை வைத்துக்கொண்டு ஒரு முழுநீளத் திரைப்படம் தந்திருக்கிறார் இயக்குநர் ஜெகன்ராஜசேகர்.
நடிகர்களின் பாத்திர அறிமுகங்களுக்குப் பிறகு வேகம் பிடிக்கும் திரைக்கதை இறுதி வரை வேகம் குறையாமல் இருப்பது இயக்குநரின் திறமை.










