ஃபைட்கிளப் திரையரங்க வசூல் நிலவரம்
டிசம்பர் 15,2023 அன்று வெளியான படம் ஃபைட்கிளப்.இந்தப்படத்தில், உறியடி விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை ஆதிகேசவன் கவனிக்க படத்தொகுப்புப் பணிகளை கிருபாகரன் மேற்கொண்டிருக்கிறார்.
சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு விக்கி மற்றும் அம்ரீன் – அபுபக்கர் ஆகியோர் இணைந்து ஆக்ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.
இப்படம் தயாரானதும் இதைப்பார்த்த இயக்குநர் லோகேஷ்கனகராஜ், அவர் தொடங்கியிருக்கும் புதிய தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் நிறுவனம் சார்பாக வெளியிட்டார்.
வெளியீட்டுக்கு முன்பே இப்படத்தின் இணைய ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி விற்பனை உரிமை ஆகியன விற்பனை ஆகிவிட்டது. அதன்விலை சுமார் ஐந்துகோடி என்று சொல்லப்பட்டது.
டிசம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியானது.
திரையரங்குகளிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் வெளியான முதல் மூன்று நாட்களில் ஐந்தேகால் கோடி ரூபாய் வசூலைப் பெற்றிருக்கிறது.
வேறுபடங்கள் எதுவும் இல்லாததால் இந்தப்படத்துக்கு வேலைநாளான நேற்றும் திருப்திகரமான வசூல் இருந்திருக்கிறது.
இப்படி ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவெடுத்து எழுதத் தொடங்கி ஓராண்டு, அதன்பின் படப்பிடிப்பு ஒராண்டு அதற்குப் பிறகான பணிகளில் ஓராண்டு என மொத்தம் மூன்றாண்டுகள் இந்தப்படம் நடந்தது.இறுதியில் நல்ல படைப்பு என்று பெயர் பெற்றதோடு வசூல்ரீதியாகவும் வெற்றிப் படமாகியிருக்கிறது.
இதனால் நாயகன் உறியடிவிஜயகுமார், இதை நம்பிப் பணம்போட்ட ரீல்குட் ஃபிலிம்ஸ், பிடித்து வெளியிட்ட லோகேஷ்கனகராஜ் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.











