ஷாருக்கானின் டங்கி – தமிழ்நாடு விநியோக உரிமை
2023 ஆவது வருடம் இந்திநடிகர் ஷாருக்கானின் இரசிகர்களுக்கு உற்சாகமான வருடமாக அமைந்துள்ளது. இவ்வாண்டு ஜனவரியில் அவர் நடித்த ‘பதான்’, செப்டம்பரில் ‘ஜவான்’, தற்போது டிசம்பரில் ‘டங்கி’ படம் வெளியாகவிருக்கிறது.இதில் ஷாருக்கான் அனைவரையும் மயக்கும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்கின்றனர்.
ராஜ்குமார் ஹிரானி எழுதி, இயக்கி, படத்தொகுப்பும் செய்திருக்கிறார்.
இப்படத்தில், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார் மற்றும் அனில் குரோவர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டங்கி’ இதயம் வருடும் அழகான படமாக இருக்கும் என்பதைப் படத்தின் பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மும்பை, ஜபல்பூர், காஷ்மீர், புடாபெஸ்ட், லண்டன், ஜெட்டா மற்றும் நியோம் என உலகின் பல இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அமன் பந்த் பின்னணி இசையமைத்துள்ளார். ப்ரீதம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.சி,கே.முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய் ஆகியோர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர்
ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
இப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தியில் தயாரான இந்தப்படம் தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தினுடைய கேரளா மற்றும் தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளது ஸ்ரீ கோகுலம் மூவிஸ்.
அந்நிறுவனம் இதுகுறித்துக் கூறியதாவது…
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ‘டங்கி’ படத்தின் விநியோகப் பங்குதாரராக இணைவதில் பெருமிதம் கொள்கிறோம். ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை கேரளா மற்றும் தமிழ்நாட்டில் விநியோகம் செய்துள்ளது ஸ்ரீ கோகுலம் மூவிஸ். ‘ஜவான்’ படத்திற்குப் பிறகு ‘டங்கி’ படத்தையும் விநியோகம் செய்கிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.மேலும் அவருடன் இன்னும் பல படங்கள் இணைந்து பணியாற்றுவோம் என நம்புகிறோம்
இவ்வாறு கூறியுள்ளது.










