செய்திக் குறிப்புகள்

சினேகாவையும் பிரசன்னாவையும் கண்டுபிடித்த சுசி.கணேசனின் புதிய முயற்சி

2002 ஆம் ஆண்டில் வெளியான விரும்புகிறேன் படம் மூலம் இயக்குநரானவர் சுசி.கணேசன். அதன்பின், ஃஃபைவ் ஸ்டார்,திருட்டுப் பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கினார்.

பின்பு, இந்தித் திரையுலகுக்குச் சென்று அங்கே இரண்டு படங்களைத் தயாரித்து இயக்கினார்.பிறகு தமிழுக்கு வந்து திருட்டுப்பயலே 2 படத்தை இயக்கினார்.

மீண்டும் இந்திக்குச் சென்றவர், இப்போது மறுபடி தமிழ்ப்படம் ஒன்றை அறிவித்திருக்கிறார்.
4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இளையராஜா இசையில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படம்தான் அது.

அப்படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு சனவரி 29,2022 அன்று வெளியிடப்பட்டது .

சுவரில் கரிக் கட்டையால் கிறுக்கியது போல் இரண்டு உருவங்களோடு அண்மையில் வெளியான இந்தப் படத்தின் முதல்பார்வை பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இருவரும் யார் என்ற கேள்வி இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதற்கான விடையைப் படத்தின் தயாரிப்பாளர் மஞ்சரி சுசிகணேசன் கூறினார்.

அவர் கூறியதாவது….

“ஏற்கனவே இந்தியில் இரண்டு படங்களைத் தயாரித்து இருக்கிறோம்.இது தமிழில் எங்களது முதல் தயாரிப்பு. எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் இயக்குநர் சுசி கணேசன் இந்தப் படத்தில் கதாநாயகன் தேர்வையும் புதுமையாக யோசித்திருக்கிறார். இந்தப் படத்துக்குகாகவே பிரபலமான டிவியில் நடக்கப்போகும் பிரம்மாண்டமான talent hunt show-வான ” வருங்கால சூப்பர் ஹீரோ 2022″ நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளர் இந்தப் படத்தின் இரண்டு ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக அறிவிக்கப்பட இருக்கிறார்.

இரண்டு ஹீரோக்களில் ஒருவர் பிரபலமான நடிகராகவும், மற்றவர் புதுமுக நடிகராகவும் அமையப் போகிற இந்தப் படத்தில் புதுமுக நடிகரின் தோற்றமும் முக பாவனையும் முக்கியம் என்பதால், ஹீரோ தேடலில் வயது வரம்பு கூட ” 20 லிருந்து 45 வரை ” என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பார்க்கும் 10 பேரில் 9 பேருக்கு நடிக்கும் ஆர்வம் பெருகிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திற்கு ஏற்ப சராசரி மனிதனுக்குக் கூட ஒரு ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்த நினைக்கும் இயக்குநர் சுசிகணேசன் முயற்சி பெரும் வெற்றி பெறும்.

இதே நிகழ்ச்சி கல்கா சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் இந்தியிலும் தெலுங்கு கன்னடம் மொழிகளிலும் நடத்தப்படும் வேலைகள் துவங்கியிருக்கின்றன. இந்த வருடத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு புது ஹீரோவை இந் நிகழ்ச்சியின் மூலம் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தும் முயற்சியில் இயக்குநர் சுசி கணேசன் வெற்றி பெறுவார்.

எங்கள் நிறுவனத்தின் அடுத்த படம் ராணி வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் துவங்கியிருக்கின்றன. எழுத்தாளர் மருது மோகனும் அவரது குழுவும் கதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகப்பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுப் பதிவாக எங்கள் நிறுவனத்தின் சார்பாக அந்தப்படம் தயாரிக்கப்படும்.

அதற்கு முன்பாக புல்லட் 19 என்ற பெயரில் ஒரு படத்தை சுசிகணேசன் இயக்கப் போகிறார். அந்தப் படத்தில் நடிக்க முக்கியமான நடிகரோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அது பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும்”

இவ்வாறு அவர் கூறினார்.

இயக்குநர் சுசி கணேசன் இதுபற்றிக் கூறும்போது,

“பலருக்கும் நடிக்கும் ஆசை, திறமை இருந்தும் பலர் பல்வேறு காரணங்களால் நடிப்புக் கனவை ஒத்திவைத்து வேறு பாதையில் பயணப்பட்டு இருப்பார்கள். தோற்றமும், முக பாவனையும் முக்கியான இந்த கதாநாயகன் தேடலுக்கு – வயது வரம்பை உயர்த்தியிருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதியுள்ள ஒரு அற்புதமான நடிகரை கண்டெடுப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்” என்றார்

ஆர்வம் உள்ள போட்டியாளர்கள் தங்கள் நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் வகையிலான காணொலியை உருவாக்கி அதை, www.4vmaxtv.com இணையதளம் அல்லது 4V MAXTV -யூ டியூப்பில் காணொலியைப் பதிவு செய்ய வேண்டும்.அது இரண்டு நிமிடத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

அதில் தேர்வாகும் போட்டியாளர்கள் இரண்டாவது சுற்றுக்கு அழைக்கப்பட்டு சென்னையில் தங்க வைக்கப்பட்டு நடிப்புப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி அளிக்கப்படும்.

மூன்றாவது சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கும் போட்டியாளர் 12 பேர், 12 வாரங்கள் நடக்கும் “வருங்கால சூப்பர் ஸ்டார் 2022 ” நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

இன்னும் இரண்டு வாரங்களில் இதனை ஒளிபரப்பும் டிவி சேனல் அறிவிக்கப்பட இருக்கிறது.

முதல்படமான விரும்புகிறேன் படத்தில் நடிகை சினேகாவை
பிரபலமான வாரப் பத்திரிகை மூலமும், ஃபைவ் ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவை பிரபலமான டி வி மூலமும் தேர்ந்தெடுத்த சுசி கணேசன், தற்போதைய வளர்ச்சிக்கேற்ப ” வருங்கால சூப்பர் ஹீரோ” நிகழ்வின் மூலம் கதாநாயகன் தேடுகிறார். இந்த முயற்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு படத்திற்காக டேலண்ட் ஹன்ட் ஷோ நடத்தி ஒரு கதாநாயகனைத் தேர்ந்தெடுப்பது தமிழ்த்திரையுலகில் இதுவே முதல் முறை.அன்றைக்கு அது புதுசாக இருந்தது. கால மாற்றத்திற்கேற்ப இது புதுமையாக இருக்கும்” என்றார் சுசி கணேசன்.

Related Posts