வலிமை படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு
அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.இந்தப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின் திரைப்படப் படப்பிடிப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தவுடன், வலிமை படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது.
சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின் டெல்லி செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காகப் புதுதில்லியில் இதுவரை எந்தப் படப்பிடிப்புமே நடக்காத ஓரிடத்தில் வலிமை படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியிருந்தாராம் போனிகபூர்.
ஆனால் கடைசிநேரத்தில் கொரோனா பரவலைக் காரணமாகச் சொல்லி அந்த அனுமதி இரத்து செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வலிமை படப்பிடிப்பு தொடரவில்லை என்கிறார்கள்.
மீண்டும் அங்கே படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறும் முயற்சிகள் ஒரு பக்கமும் வேறு இடங்களில் படப்பிடிப்பைத் தொடரலாமா? என்கிற தேடல் ஒருபுறமும் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.











