September 14, 2026
சினிமா செய்திகள்

கோமாளி படத்தில் வெடித்த சிக்கல் தீர்ந்ததா? – நடந்தது என்ன?

ஜெயம்ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான படம் கோமாளி.

புது இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள அந்தப்படத்தை ஐசரிகணேஷ் தயாரித்திருக்கிறார்.

இந்தப்படத்தின் வெளியீட்டுக்கு முன், திருச்சி பகுதி திரையரங்க உரிமையாளர்கள் கோமாளி படத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள்.

கோமாளி படத்தை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட்ட சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிட்டது.

அந்தப்படத்தின் வரவு செலவு சிக்கல் காரணமாக கோமாளி படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதில் தற்போதைய தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக்குழு தலையிட்டு அமைச்சர் கடம்பூர் ராஜு விடம் முறையிட, அவர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பேசியதால், எல்லாச் சிக்கல்களும் முடிந்து படம் வெளியானது என்று சொன்னார்கள்.

ஆனால், சிக்கல் தீரவில்லை தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மையாம்.

அமைச்சர் தலையிட்டதால் சிக்கல் தீர்ந்ததாகச் சொல்லவேண்டும் என்பதற்காக திருச்சியின் மூத்த விநியோகஸ்தரான பரதன் ஃபிலிம்ஸ் விசுவநாதன் இதற்குள் வந்திருக்கிறார்.

அவர் சுமார் இருபத்தைந்து இலட்சம் கொடுத்து இப்போதைக்கு இதை வைத்துக் கொள்ளுங்கள், இந்தப்படம் வெளியாகட்டும் அதன்பின் மிஸ்டர் லோக்கல் நட்டத்தை ஈடுகட்ட என்ன செய்வது? என்பதைப் பேசிக் கொள்ளலாம் என்று சொன்னாராம்.

மூத்தவர் சொல்கிறார் என்பதால் இறங்கி வந்த திரையரங்குக்காரர்கள், கோமாளி படத்தைத் திரையிட்டார்களாம்.

இருந்தாலும் மிஸ்டர் லோக்கல் நட்டத்துக்கு ஈடுகட்டும் வரை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் மற்றும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி ஆகிய நிறுவனங்களின் படங்கள் வெளிவரும்போது மீண்டும் இதே சிக்கல் வருமென்கிறார்கள்.

எந்த மாதிரி ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டாலும் ஒரு படத்தில் நட்டம் என்றால் இது போன்ற சிக்கல்களைத் தவிர்க்கவே முடியாது என்கிறார்கள்.

இது என்ன டிசைனோ தெரியவில்லை.

Related Posts