September 19, 2026
விமர்சனம்

பில்லா பாண்டி – திரைப்பட விமர்சனம்

ஒரு சிறிய கிராமத்தில் கட்டிடம் கட்டும் கொத்தனார் வேலை செய்யும் நாயகன்.

அவருக்கு ஒரு முறைப்பெண். பெற்றோர் எதிர்ப்பை மீறி நாயகனைத் திருமணம் செய்யப் போராடுகிறார்.

நாயகன் கட்டிடம் கட்டப் போன இடத்தில் அவருடைய நற்குணங்களைப் பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார் ஒரு பெண்.

அதன்விளைவாக ஏற்படும் சிக்கலில் அப்பெண் மனநலம் பாதிக்கப்படுகிறது. அவரைப் பாதுகாக்கும் பொறுப்பு நாயகனிடம் வந்து சேருகிறது.

முறைப்பெண்ணா? தன்னை காதலித்த பெண்ணின் பாதுகாப்பா? என்கிற சிக்கலான கட்டத்தில் சிக்குகிறார் நாயகன். அதன்பின் என்ன நடக்கிறது என்பது இந்தப்படம்.

இதில் நாயகன் நல்லவர் என்று சும்மா சொல்லாமல் அஜித் ரசிகராக இருப்பதால் அவர் நல்லவர் என்பது இப்படத்தின் கதை.

தல தல என்று அஜித் புராணம் பாடும் நாயகனாக ஆர். கே.சுரேஷ். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சண்டை மட்டுமில்லாமல் உருக்கமான மனநிலையை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.

முறைப்பெண்ணாக வரும் சாந்தினி மற்றும் இன்னொரு நாயகி சிந்துஜா ஆகியோரும் சிறப்பு.

மனநலம் பாதிக்கப்பட்ட வேடத்தில் நன்றாக நடித்திருக்கிறார் சிந்துஜா.

தம்பிராமையா சிரிக்க வைக்கிறார். கொத்தன் கோமியம் கோபுரத்திலே என்பதற்கு அவர் சொல்லும் விளக்கமும் அதற்கு சங்கிலிமுருகனின் புலம்பலும் எல்லோருக்கும் பொதுவானது.

ஒரு காட்சியில் வருகிற இயக்குநர் ராஜ்சேதுபதி சிரிக்க வைப்பதோடு எல்லாவற்றையும் எளிமையாக எடுத்துக்கொள்வது நல்லது என்றும் சொல்லியிருக்கிறார்.

மாரிமுத்து கொடுத்த வேடத்துக்குப் பொருத்தமாக நடித்து நற்பெயர் பெறுகிறார்.

ஜீவனின் ஒளிப்பதிவு நன்று. இளையவனின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன.எம் எம் எஸ் மூர்த்தியின் கதை திரைக்கதை வசனத்தில் பழமையின் வாசம் இருந்தாலும் சுவாரசியமாக நகர்த்திச் செல்கிறார்.

நாயகன் அஜித் ரசிகர் என்று இல்லாவிட்டாலும் ஒன்றும் குறைந்திருக்காது.

இயல்பாக ஒரு கதாநாயகனுக்கு இருக்கும் நற்குணங்களுக்கு அஜித் முலாம் பூசி அவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

Related Posts