விமர்சனம்

ஆதார் – திரைப்பட விமர்சனம்

எளியமனிதர்கள் வாழ்க்கையில் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக அதிகார வர்க்கம் ஆடும் கொடூர ஆட்டத்தைப் படம் பிடித்து அதிர வைத்திருக்கும் படம்தான் ஆதார்.

கட்டிடத் தொழிலாளியான கருணாஸின் மனைவி ரித்விகா. வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி, சென்னை வந்து, ஒர் வளரும் கட்டிடத்தில் தங்கி, அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரித்விகாவுக்குக் குழந்தை பிறக்கிறது.குழந்தை பிறந்த ஓரிருநாட்களில் மருத்துவமனையிலிருந்து அவர் காணாமல் போகிறார். அவருடன் துணைக்கு வந்த இனியாவும் காணாமல் போகிறார்.

பச்சிளம் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு மனைவியைத் தேடி அலைகிறார் கருணாஸ். கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் நெஞ்சைப் பதற வைக்கும் திரைக்கதை.

கையில் குழந்தையுடன் அறிமுகம் ஆகும் காட்சியிலேயே நம்மைத் துயரத்தில் ஆழ்த்திவிடுகிறார் கருணாஸ். ஏழைக் கட்டிடத் தொழிலாளி போலவே மாறி நிற்கும் கருணாஸ் கடைசிவரை கலங்க வைத்துக்கொண்டேயிருக்கிறார்.இவர் நகைச்சுவை நடிகர் என்று சத்தியம் செய்தாலும் தெரியாதவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

கருணாஸின் மனைவி ரித்விகாவுக்குப் பெரிதாக வேலையில்லை.

திருட்டுத் தொழில் செய்பவராக நடித்திருக்கும் இனியாவுக்கு இந்தப்படம் பெரும்பலம். ஆக்ரோசம் அன்பு ஆகிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி நல்ல நடிப்பு என்று பெயர் வாங்குகிறார்.

தலைமைக்காவலராக நடித்திருக்கும் அருண்பாண்டியன், படம் நெடுக வருகிறார். இவர் நல்லவரா? கெட்டவரா? என்று பட்டிமன்றமே நடத்தலாம். அந்த மாதிரி அவருடைய வேடம் அமைந்துள்ளது.

காவல்துறை ஆய்வாளராக வரும் பாகுபலி பிரபாகர், உதவி ஆணையராக வரும் உமா ரியாஸ்கான் ஆகியோர் அதிகாரத் தோரணையை அமைதியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இனியாவின் சகோதரராக வரும் திலீபன், தானி ஓட்டுநர்கள் மேல் தப்பான எண்ணம் உருவாக்கும் அளவுக்குச் சரியாக நடித்திருக்கிறார்.

மகேஷ்முத்துசாமியின் ஒளிப்பதிவினால் பெரும்பாலான இரவுக்காட்சிகளும் இண்டு இடுக்குகளீல் படமாக்கப்பட்ட காட்சிகளும் அந்த நேரத்து உணர்வுகளை பார்க்கிறவர்களுக்குக் கொடுக்கின்றன.

ஸ்ரீகாந்த்தேவாவின் இசையில் தாலாட்டுப்பாடல் கண்ணீரிவிட வைக்கிறது. பின்னணி இசையும் பொருத்தம்.

அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார்.

எல்லோரையும் மெதுவாகப் பேசவிட்டு மெதுவாக நடக்கவிட்டு காட்சிகளை மிகமெதுவாக நகரவிட்டிருப்பது அயர்ச்சியை ஏற்படுத்தினாலும் இன்றைய எதார்த்த வாழ்வைக் கண்முன்காட்டி அடர்த்தியான கருத்தை அழுத்தந்திருத்தமாகச் சொல்லித் திகைக்க வைத்த விதத்தில் கவனம் ஈர்த்திருக்கிறார்.

Related Posts