பூமி – திரைப்பட விமர்சனம்
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த பூமிநாதன் ( நாயகன் ஜெயம்ரவி) நாசா விஞ்ஞானியாகி செவ்வாய் கிரகம் செல்லும் குழுவுக்கு தலைமையேற்கிறார். இடையில் கிடைக்கும் ஒரு மாத விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வருகிறார்.
வந்த இடத்தில் விவசாயிகளின் நிலை, விவசாய நிலங்களின் நிலை, நிலத்தடி நீரின் நிலை ஆகியன கண்டு பேரரதிர்ச்சியாகிறார். அவற்றைச் சரி செய்ய முயல்கிறார். அப்போது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் பூமி படம்.
இது ஜெயம்ரவியின் இருபத்தைந்தாவது படம். நாசா விஞ்ஞானி, தமிழக விவசாயி ஆகிய வேடங்களில் தன்னைக் கச்சிதமாகப் பொருத்திக் கொண்டிருக்கிறார் ஜெயம்ரவி.ஓரிரு காதல்காட்சிகளிலும் இணக்கமாக இருக்கிறார்.
அமெரிக்காவில் நடக்கும் நீதிமன்ற விசாரணயில் செவ்வாய் கிரக ஆய்வை விட சொந்த ஊரில் விவசாயம் செய்வதே பெரிது என்று அழுத்தமாகச் சொல்லும் காட்சி அவருடைய நடிப்புத்திறனுக்குச் சான்று.
விவசாயம் தொடங்கிய பின் சந்திக்கும் சவால்களை முறியடிப்பது, மக்களே எனக்கு எதிரியாயிருந்தா நான் என்ன செய்வேன்? எனக் கலங்கி அழுவது உட்பட எல்லா இடங்களிலும் அடித்து விளையாடியிருக்கிறார் ஜெயம்ரவி.
நாயகி நிதிஅகர்வால் அழகு. ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளுக்குப் பிறகு கூட்டத்தில் ஒருவராகிவிடுகிறார்.
தற்கால விவசாயிகளின் பிரதிபலிப்பாக தம்பிராமய்யா, தற்கால அமைச்சர்களின் பிரதிநிதியாக ராதாரவி ஆகியோர் இருக்கின்றனர்.
சரண்யாபொன்வண்ணன், (கொஞ்சம் குண்டாகிவிட்டாரே) சதீஷ், ஜான்விஜய்,மாரிமுத்து ஆகியோர் தங்களுக்கான வேலைகளை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
அம்பானி, அதானி என்கிற பெயர்களை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிற நமக்கு ரோநித்ராய் மூலம் அவர்கள் யார்? என்னவெல்லாம் செய்கிறார்கள்? என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.அவரும் மிகச்சரியாக நடித்திருக்கிறார்.
டட்லியின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும்பலம். காட்சிகளைத் துல்லியமாகக் காட்டி அதன் உணர்வுகளை நமக்குக் கடத்தியிருக்கிறார்.
இமானின் இசையில் மதன்கார்க்கி எழுதியுள்ள தமிழன் என்று சொல்லடா, உழவா ஆகிய பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என நினைக்க வைக்கிறது.
தற்போது தில்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் எதற்கு? என்று புரியாதவர்கள் இந்தப்படம் பார்த்தால் புரிந்துவிடும்.
பணம், புகழ், அந்தஸ்து ஆகியனவற்றிற்காக எத்தகைய கொடூரங்களையும் அரங்கேற்றும் பன்னாட்டு நிறுவனங்களையும் அவர்களுக்குத் துணைபோகும் நம்ம ஊர் அரசியல்வாதிகள் அதிகார வர்க்கம் ஆகியனவற்றை அழகாக அம்பலப்படுத்தியிருக்கிறது படம்.
மண் ஏன் மலடாகிறது? நிலத்தடி நீர் ஏன் குறைந்துகொண்டே போகிறது? போன்ற மிக அடிப்படையான விசயங்களை எல்லோருக்கும் புரியும்படி சொல்லியிருக்கின்றனர்.
தீமையை எதிர்த்துப் போராடுவதென்பது நல்லதை உருவாக்குவதுதான் எனும் நல்ல கருத்தை நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் தொடக்கத்தில் வருகிற காதல் காட்சி மற்றும் பாடல் முடிந்தபின்னர் சர்ரெனப் பறக்கிறது திரைக்கதை.
பொழுதுபோக்கு அமசங்களுக்கு இடங்கொடுக்காமல் விவசாயம் பற்றிய நம்பிக்கையை விதைத்தே ஆக வேண்டும் என்று வேகங்கொண்டு இயங்கியிருக்கிறார் இயக்குநர் லட்சுமணன்.
இப்படி ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்த இயக்குநர் லட்சுமணன் அதை ஏற்றுக் கொண்டு திறம்பட நடித்திருக்கும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.












