பிப்ரவரி 9 முதல் அயலான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அயலான். 2024 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 12 அன்று வெளியான இத்திரைப்படத்தை இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார்.
இப்படத்தில், நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இவர்களோடு, யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் வேற்றுக் கிரக வாசியை மையப்படுத்தி உருவாகியிருந்த ஃபேண்டசி திரைப்படமான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது.
இதைனிடையே இப்படம் வெற்றி என்று கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன், படத்தில் பணியாற்றிய இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்பக்கலைஞர்களை அழைத்து விருந்து வைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை ஐந்து மணியளவில் சன்நெக்ஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் சன்நெக்ஸ்ட் இணையத்தில் காணக்கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திரையரங்குகளில் வெளியான ஒருமாதத்துக்குப் பிறகு இணையத்தில் வெளியிடலாம் என்கிற ஒப்பந்தப்படி இப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம்.
அதனால் படம் வெளியாகி சரியாக 28 நாட்கள் முடிவடைந்து 29 ஆவது நாளில் இணையத்தில் வெளியாகவிருக்கிறது.
இந்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் இரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.












