தனுஷ் 50 படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவானது
தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் அவருடைய ஐம்பதாவது படம்.இந்தப்படத்துக்கு ராயன் என்று பெயர் வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இந்தப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் இருக்கிறார்.
இப்படத்தில், அமலாபால், அபர்ணாபாலமுரளி மற்றும் துஷாராவிஜயன் ஆகிய மூன்று நாயகிகள் நடித்திருக்கிறார்கள்.மேலும், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப்கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அவர்களோடு காளிதாஸ் ஜெயராமும் நடிக்கிறார்.
தனுஷின் 50 ஆவது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதை அந்நிறுவனம் சனவரி 18,2023 அன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.அதன்பின் ஐந்து மாதங்களுக்குப் பிறகு,2023 ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவித்தனர். அதன்பின் விட்டுவிட்டு நடந்த அதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது.இப்போது அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி பல விவாதங்களுக்குப் பிறகு இறுதியாகியுள்ளதாம்.
அதிலென்ன விவாதம்?
இப்படத்தை ஏப்ரல் 11 ஆம் தேதியன்று வெளியிடலாம் என்கிற முடிவை எடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்தத் தேதியில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் அனல் பறந்து கொண்டிருக்கும். அந்நேரத்தில் படத்தை வெளியிட்டால் மக்களின் கவனத்தை ஈர்க்கவியலாது என்று வியாபார வட்டத்தில் பலர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.
அதேநேரம், தேர்தல் வேளையாக இருந்தாலும் திரைப்பட இரசிகர்கள் அதில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.அவர்கள் புதுப்படம் வெளியானால் திரையரங்குக்கு வந்து பார்ப்பார்கள். அதுவும் தனுஷ் படம் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும், அதனால் படத்தை வெளியிடுவதில் தவறில்லை வெளியிடலாம் என்பது இன்னொரு தரப்பு.
இவ்விரு கருத்துகளும் பரவலாக விவாதிக்கப்பட்டு இறுதியில் படத்தை ஏப்ரல் 11 ஆம் தேதியன்று வெளியிடுவது என்கிற முடிவை தயாரிப்பு நிறுவனம் எடுத்துவிட்டதாம். இதை தனுஷும் ஏற்றுக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
இதனால் மிகவிரைவில் இப்படத்தின் பெயர், முதல்பார்வை மற்றும் வெளியீட்டுத் தேதி ஆகியன அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறார்கள்.
வெளிப்படையாகச் சொல்லும் வகையில், முதன்முறையாக தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் இது என்பதால், அவருடைய இரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியிலும் இந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.










