சினிமா செய்திகள்

அருள்நிதி படத்துக்கு 15 கோடி – ஆச்சரிய வியாபாரம்

புதுநடிகர் அக்‌ஷய்குமார் நாயகனாக அறிமுகமான படம் சிறை.அப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.அதனைத் தொடர்ந்து மீண்டும் செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் ராவடி படத்தில் நடித்திருக்கிறார். எல்.கே.அக்‌ஷய் குமாருடன் பாசில் ஜோசப், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ளார்.

இதன் ஒளிப்பதிவாளராக லியோன் பிரிட்டோ, இசையமைப்பாளராக ஜென் மார்ட்டின் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து இப்படத்தினை உருவாக்கியுள்ளது படக்குழு. தற்போது ‘ராவடி’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருள்நிதி நடித்துள்ள படம் மை டியர் சிஸ்டர்.என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள இப்படத்தில் மம்தா மோகன்தாஸ் அருள்நிதிக்கு அக்காவாக நடித்திருக்கிறார்.இதில் அருள்நிதிக்கு நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றிவேல், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா,படத்தொகுப்பாளராக வெங்கட் ராஜன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.நகைச்சுவை கலந்த பாசக்கதையாக உருவாகி இருக்கிறது இப்படம். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மை டியர் சிஸ்டர் படத்தினை தயாரித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

எதற்காக இவ்விரு படங்களைப் பற்றிய விவரம்?

இப்போதெல்லாம் டிஜிட்டல் ரைட்ஸ் எனப்படும் இணைய ஒளிபரப்பு உரிமை விற்பனை மொத்தமாகப் படுத்துவிட்டது.அதனால் திரையுலகம் மிகவும் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இவ்விரு படங்களும் வெளியீட்டுக்கு முன்பே இணைய ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு விற்பனை நடந்திருக்கிறது என்கிற வியப்புத் தகவல் வெளியாகியுள்ளது.அதுவும் இவ்விரு படங்களும் தலா பதினைந்து கோடி அளவில் விற்பனையாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இணைய ஒளிபரப்பை ஹாட்ஸ்டார் நிறுவனமும் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பை விஜய் தொலைக்காட்சியும் வாங்கியிருக்கிறது என்கிறார்கள்.

இதற்கு முன்பாக ஆர்யா,சரத்குமார்,மஞ்சுவாரியர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்த மிஸ்டர் எக்ஸ் படமும் இதேவிலைக்கு விற்பனை ஆனது எனச் சொல்லப்பட்டது.அதேவிலைக்கு அருள்நிதி படமும் அக்சய்குமார் படமும் விற்பனை ஆகியிருப்பதும் வியப்புக்கு இன்னொரு காரணம் என்கிறார்கள்.

ராவடி மற்றும் மை டியர் சிஸ்டர் ஆகிய படங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டன என்றும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts