சினிமா செய்திகள்

ஏப்ரல் 23 பாப்பிலோன் வெளியீடு உறுதி – ஆறு.ராஜா நிம்மதி

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்தப் படத்தைத் தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தமாம்.

அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் கதாநாயகன். எதிர்பாராமல் அவரது தங்கையின் காணொலி ஒன்று கயவர்களின் கையில் சிக்குகிறது. அவர்கள் அதன்மூலம் தங்கையை மிரட்டி பணம் பறிப்பதுடன், ஒரு கட்டத்தில் அவரைக் கடத்தவும் முயல்கின்றனர்.

இதில் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார் தங்கை. கதாநாயகி மூலம் இந்த விபரம் அண்ணனுக்குத் தெரியவர, இதன் பின்னணியில் உள்ள கும்பலை நாயகன் எப்படி வேரறுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பண்ணையார் கதாபாத்திரத்தில் பூராமு மற்றும் அவரது மகளாக அபிநயா நடிக்க, ‘மாரி’ புகழ் வினோத் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஷ்யாம் மோகன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.. அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.பார்த்திபனின் வித்தியாச முயற்சியான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு படத்தொகுப்பு செய்த சுதர்சன் இப் படத்தின் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.

வத்தலகுண்டு, தாண்டிக்குடி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இந்தப் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து இருக்கும் ஆறு ராஜா, கலை இயக்குநர் தோட்டா தரணியின் குழுவில் பணியாற்றியவர். ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் சந்திரமுகியின் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியவர் இவர்தான்.

எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்திருக்கும் ஆறு ராஜா, இந்தக்கதையின் மீதுள்ள அதீத நம்பிக்கை காரணமாகவும் அந்தக் கதைக்கு எந்தக் குறையும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறாராம்.

இந்தக் கதையை நம்பி இவ்வளவும் செய்திருக்கிறேன், இது என்னைக் கைவிடாது என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய ஆறு.ராஜாவுக்கு எதுவும் எளிதாக நடந்துவிடவில்லை.

ஒவ்வொரு கட்டமாகக் கடந்து ஏப்ரல் 23 வெளியீடு என்று அறிவித்தார். அதற்கான வேலைகளில் இறங்கிய நேரத்தில் பேரிடியாய் வந்தது தமிழக அரசின் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திரையரங்குகள் ஓடாது என்னும் அறிவிப்பு.

இந்த அறிவிப்பால் ஒட்டுமொத்தமாகவே திரையரங்குகளை மூடலாம் என திரையரங்கு உரிமையாளர்கள் யோசித்தனர்.

ஆனால் அதன்பின் அவர்கள் அம்முடிவைக் கைவிட்டு திரையரங்குகள் செயல்படும் என்று அறிவித்துள்ளனர்.

இதனால் நிம்மதியடைந்த ஆறு.ராஜா திட்டமிட்டபடி ஏப்ரல் 23 அன்று படத்தை வெளியிடுகிறார்.

ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும் எனும் பாடல் வரிகளுக்கேற்ப வந்துநிற்கிறார் ஆறு.ராஜா.

அவருக்கு வெற்றி வசப்பட வாழ்த்துகள்.

Related Posts