விஜய்சேதுபதி படத்திலிருந்து விலகியது ஏன்? – அதிதிராவ் விளக்கம்
அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பு பத்துநாட்கள் நடைபெற்றிருந்தது.
இந்தப் படத்தில் அதிதி ராவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமான போது, அதிதி ராவ்விடம் தேதிகள் இல்லை. இதனால், ‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து அதிதி ராவ் விலகிவிட்டார்.
தற்போது அவருக்குப் பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘சங்கத்தமிழன்’ படத்தில் விஜய் சேதுபதி – ராஷி கண்ணா கூட்டணி ஏற்கனவே இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.
ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித் குமார் தயாரித்து வருகிறார்.
இப்படத்திலிருந்து விலகியது குறித்து அதிதிராவ் விளக்கமளித்துள்ளார்.
அதில், நான் ஏற்கெனவே நடிக்கத் தொடங்கிய படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, இன்னும் நடிக்கத் தொடங்காத இந்தப்படத்திலிருந்து விலகுகிறேன். இது தொடர்பாக தயாரிப்பாளார் லலித்குமார் மற்றும் இயக்குநர் டெல்லிபிரசாத் தீனதயாள் ஆகியோரிடம் கலந்து பேசிவிட்டு இம்முடிவை எடுத்திருக்கிறேன்.
எனக்குப் பதிலாக இப்படத்தில் நடிக்கவிருக்கும் ராஷிகண்ணாவுக்கு என் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.











