சினிமா செய்திகள்

கைபேசியால் சிக்கிய மீராமிதுன் – கேரளாவில் கைது

தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி எனச் சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீராமிதுன். அவர் அண்மையில் வெளீயிட்ட காணொலி ஒன்றில், பட்டியலின மக்களைக் குறிப்பிட்டு மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்தார் பட்டியலின சமூகத்தினர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்; அப்படி இருப்பதால்தான் அவர்களை அனைவரும் விமர்சிக்கிறார்கள். இத்தகைய சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒட்டுமொத்தமாக சினிமா துறையில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என இழிவுபடுத்திப் பேசி இருந்தார் மீரா மிதுன்.

அவரது இந்தப் பேச்சு திரைத்துறையில் மட்டுமின்றி பொதுவெளீயிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதைத் தொடர்ந்து, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட பலரும் பல்வேறு காவல்நிலையங்களில் மீரா மிதுன் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் கொடுத்தனர்.

சென்னையில் வன்னி அரசு கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு- சைபர் கிரைம் காவல்துறையினர் நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கலகம் செய்யத் தூண்டுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகத்தை உருவாக்குதல் ஆகிய பிணையில் வெளிவர முடியாத 7 பிரிவுகளில் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மீரா மிதுன் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு -சைபர் கிரைம் காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பினர்.ஆனால் அதன்படி மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.அவரது தரப்பில் இருந்தும் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ஆனால், என்னைக் கைது செய்யவே முடியாது. அது கனவில் தான் நடக்கும் என்று மீரா மிதுன் சவால் விட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து அவர் இருக்கக் கூடிய இடம் எங்கே என்று கைபேசி அலைவரிசையை வைத்துத் தேடினர்.அதில், அவர் கேரளாவில் இருப்பது தெரியவந்தது.

உடனே தனிப்படைக் காவல்துறையினர் கேரளா விரைந்து அவரைக் கைது செய்தனர். இதையடுத்து மீரா மிதுன் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.

மீராமிதுன் கைதாகியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts