சினிமா செய்திகள்

இப்போது ஹீரோ அடுத்து வில்லன் தொடரும் படங்கள் – விக்னேஷ் பேட்டி

விட்டுவிட்டு நடித்தாலும் விடாமல் நடித்துக் கொண்டிருப்பவர் விக்னேஷ். திரைப்படம் தாண்டி தொழில்முனைவோராக இருந்தாலும் திரைப்படத்துறையை விட்டுப் போகாமல் தொடர்கிறார். அண்மையில் அவர் குணச்சித்திர வேடமேற்ற ஆனந்தம் விளையாடும் வீடு படம் வெளியானது. இப்போது தமிழர்திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் பாசக்கார பய படம் வெளியாகவிருக்கிறது.

அதையொட்டி அவருடன் ஓர் உரையாடல்…

1. பாசக்கார பய படம் பற்றிச் சொல்லுங்கள்..?

விவேகபாரதி இயக்கியிருக்கும் இந்தப்படம் தலைப்பில் இருப்பது போல் பாசம் மட்டுமின்றி கோபம் வீரம் ஆகியனவற்றையும் கொண்ட படம். குழந்தைளை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராகப் பேசுகிற படம். காதல் மற்றும் சண்டைக்காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளன. கதாநாயகியாக காயத்ரிஐயர் நடித்துள்ளார். அவருக்கு இரட்டை வேடங்கள். அவை என்ன? அதனால் என்ன நடக்கிறது? என்பதையெல்லாம் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறோம்.

2. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீங்கள் கதாநாயகனாக நடிக்கும் படம் பொங்கல்நாளில் வெளியாகிறது. எப்படி உணர்கிறீர்கள்..?

இந்தப்படம் 2019 ஆம் ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட படம். 2020 தொடங்கியதும் கொரோனா சிக்கலும் தொடங்கிவிட்டது. அதனால் தள்ளித் தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. அதனால் வருத்தமாக இருந்தது. பொங்கல் வெளியீடு என்று வருவதால் அந்த வருத்தம் மறைந்து மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

3.இப்போது நடிக்கும் படங்கள் பற்றி..?

இப்போது ஒரு படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அது மிகவும் பேசப்படும் வேடமாக இருக்கும் என்பதால் ஒப்புக்கொண்டேன். அவ்வேடம் என்ன? கதைக்களம் என்ன? என்பது பற்றி இப்போது சொல்லக்கூடாது.இதுதவிர இன்னும் சில படங்கள் இருக்கின்றன. அவை பற்றி அடுத்தடுத்துச் சொல்கிறேன்.

Vignesh

Vignesh

4.கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் ஆகிய எல்லாவற்றிலும் நடிக்கிறீர்கள், எதனால்?

ஹீரோவா? வில்லனா? கேரக்டர் ஆர்டிஸ்டா? என்றெல்லாம் பார்ப்பதில்லை. என்னுடைய வேடம் மக்கள் மனதில் பதிகிற மாதிரி இருக்கிறதா? என்று மட்டும் பார்க்கிறேன்.அவ்வாறு இருப்பதை ஒப்புக்கொண்டு நடிக்கிறேன்.

5.ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் உங்கள் காட்சிகள் குறைவாக இருந்ததே. அதை ஒப்புக்கொணடது ஏன்?

அந்தப்படத்தில் நான் நடித்த சில முக்கியமான காட்சிகளைத் தூக்கிவிட்டாரகள். அவை இருந்திருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும்.

6.உங்கள் நண்பர், உங்களை வைத்து ஆச்சார்யா படமெடுத்த இயக்குநர் ரவி மறைந்துவிட்டாரே..?

அண்மையில் என்னை உலுக்கிய நிகழ்வு அது. வாழ்க்கையில் பொறுமையாக இருந்தால் எல்லாவற்றையும் அடையலாம் என்று சொல்லப்படும் கருத்தை நான் நிராகரிக்கிறேன். ரவி, எப்போதும் என்னிடம் அப்படித்தான் சொல்வார். நம்முடைய துறையில் நாம் பொறுமையாக உழைப்பைச் செலுத்திக்கொண்டே இருப்போம் கண்டிப்பாக உயர்ந்த நிலைக்கு வருவோம் என்பார்.திடீரென அவர் இல்லை. இதனால் அந்தக் கருத்தே தவறு எனத் தோன்றுகிறது.

– ராஜா

Related Posts