கார்த்தியின் கதைத் தேர்வு – திரையுலகம் வியப்பு
மாநகரம் பட இயக்குநர் லோகேஷ்கனகராஜின் வித்தியாசமான கதையில் உருவாகியிருக்கும் ‘கைதி’ படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
‘கார்த்தி 19’ என்கிற பெயரில் அழைக்கப்படும் இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மார்ச் 13 அன்று ஆரம்பமானது. தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் நடைபெறும்.
இப்படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு,எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
இப்படத்தில், கார்த்தி ஜோடியாக ரஷ்மிகா மண்டன்னா தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ்கண்ணன் இயக்குகிறார்.
இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு சத்யன் சூரியன், படத்தொகுப்பு – ரூபன்,கலை ராஜீவன்,சண்டைப் பயிற்சி திலீப் சுப்பராயன்.
உணர்வுப்பூர்வம், சண்டை ஆகியனவற்றை நகைச்சுவை கலந்து சொல்லக்கூடிய கதையாம்.
கடந்த ஆண்டு வெளியான கடைக்குட்டி சிங்கம் குடும்பப்பாசம் கலந்த கதை, அண்மையில் வெளியான தேவ் முழுக்க முழுக்க காதல் கதை, அடுத்து வரவிருக்கும் கைதி வித்தியாசமான கதை அமைப்பு. அதற்கடுத்து நடிக்கும் இந்தப்படம் நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
கார்த்தியின் இந்தக் கதைத் தேர்வு நன்றாக அமைந்திருக்கிறது என்றும் மற்ற நடிகர்கள் இதைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் சொல்கிறார்கள்.











