அவசரமாகத் தொடங்கியது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் படம் – ஏன்?
சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தில் அவருக்கு இணையராக சாய்பல்லவி நடிக்கிறார்.அப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்துக்கு அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இம்மாதம் முதல் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொன்னார்கள்.அதற்குள் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிடும் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையவில்லை. இன்னும் இருபது முதல் முப்பது நாட்கள் வரை அப்படத்தின் படப்பிடிப்பு இருக்கிறதென்று சொல்லப்படுகிறது.
அப்படியிருக்கும்போது இன்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எளிமையாகத் தொடங்கியுள்ளது என்கிறார்கள்.
இன்று நடந்த பூஜையில் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன், நாயகியாக நடிக்கவிருக்கும் ருக்மணி, இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர்கள் திருப்பதி பிரசாத், ஆர்.பி.செளத்ரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.
இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சுமார் இருபதுநாட்கள் வரை நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
ராஜ்குமார் பெரியசாமி படத்தை முழுமையாக முடிப்பதற்கு முன்பாக இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதற்குக் காரணம் இருக்கிறதாம்.
அந்தப்படத்தில் இராணுவ அதிகாரியாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அதற்கு முன்னதாக அவருடைய கல்லூரிப்பருவம் மற்றும் இராணுவப் பயிற்சிக்காலம் ஆகியனவற்றைப் படமாக்க வேண்டியிருக்கிறதாம். அதற்கு இப்போது இருக்கும் தோற்றத்தைக் காட்டிலும் கொஞ்சம் ஒல்லியாக இருக்கவேண்டும்.அதனால் உடல் எடை குறைக்கவேண்டும்.
அதேசமயம் ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இப்போது இருக்கிற மாதிரி தாடி மீசையுடன் இருக்கவேண்டிய கட்டாயம். எனவே ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்தவுடன் உடல் எடை குறைத்து தாடி மீசையை எடுத்துவிட்டு ராஜ்குமார்பெரியசாமி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்கிறார்கள்.
ராஜ்குமார் பெரியசாமி படத்தை மொத்தமாக முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்குப் போகலாம் என்றால், அப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தொடங்கிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. படப்பிடிப்பு தொடங்கும் தேதிகளை முன்கூட்டியே சிலமுறை முடிவு செய்தும் சொன்னபடி தொடங்க முடியவில்லையாம்.
அதனால் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பு அதிருப்தி தெரிவித்ததால் அந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிடலாம் என்று முடிவு செய்து அதைச் செயல்படுத்தியிருக்கிறார்கள்.











