இரண்டாண்டுகளுக்குப் பிறகும் டிரெண்டாகும் மகேஷ்பாபு படம்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு படங்களில் சந்தேகத்திற்கு இடமின்றி பொழுதுபோக்கு அம்சங்களோடு சமுதாயத்துக்குத் தேவையான கருத்துகள் இடம்பெற்றிருக்கும்.அப்படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்புகள் மூலம் அவர் எவ்வளவு பரவலாக நேசிக்கப்படுகிறார் என்பது தெரியவரும்.
அவர் நடித்த படமொன்றில்,வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பி மோசமடைந்து வரும் அரசியல் நிலையைப் பற்றி அறிந்து கொள்வார். பின்னர் அவர் தனக்கு என்ன காத்திருக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், அமைப்பை மாற்றுவதற்காக தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார். முதலமைச்சராகிறார். நாட்டில் பல அதிரடிகளைச் செய்கிறார்.
பாரத் அனே நேனு என்கிற அந்தப்படத்தை கொரட்டலா சிவா இயக்கியிருந்தார். படம் 20 ஏப்ரல் 2018 அன்று திரைக்கு வந்தது.
திரைக்கு வந்த போது, 2018 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. பார்வையாளர்களுக்கு தேசபக்தி உணர்வைத் தூண்டியது. தங்கள் நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களுக்கும் உற்சாகம் கொடுத்த படம்.ரசிகர்கள் மிகவும் நேசித்தார்கள்,அதிகரித்துக் கொண்டே போன ரசிகர்களின் எண்ணிக்கை சூப்பர் ஸ்டார் மீதான தங்கள் அன்பை மீண்டும் நிரூபித்தது.
இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பல வசூல் சாதனைகளைப் படைத்த இந்தப்படத்தின் இரண்டாமாண்டு இன்று. அதை மகேஷ்பாபு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடிவருகிறார்கள்.
அப்படக்காட்சிகளையும் வசனங்களையும் வசூல் நிலவரங்களையும் பகிர்ந்து அவர்கள் கொண்டாடிவருவதால் ட்விட்டர் டிரெண்டில் அப்படம் இடம் பிடித்திருக்கிறது.











