சினிமா செய்திகள்

அமலா பால் இரண்டாவது திருமணம் – புகைப்படங்கள் நீக்கத்தால் மர்மம்

தமிழில் ‘மைனா’ படம் மூலம் புகழ்பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அமலாபால். தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லாப் பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப் பயலே-2 உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

ஆடை படத்தில் உடைகள் எதுவும் அணியாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அமலாபாலுக்கும், இயக்குநர் விஜய்க்கும் 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

சமீபத்தில் அமலாபாலும், இந்தி பாடகர் பவ்னிந்தர் சிங்கும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இருவரும் காதலிப்பதாகத் தகவல் பரவியது.இதற்கு அவர்கள் விளக்கம் எதுவும் சொல்லவில்லை.

இந்தநிலையில், அமலாபால் பவ்னிந்தர் சிங் திருமண புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. பவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தத் திருமணப் படங்களை வெளியிட்டார். ஆனால் புகைப்படங்களை வெளியிட்ட சிறிது நேரத்தில் அவற்றை நீக்கிவிட்டார்.

இதன் மூலம் இருவரும் இரகசிய திருமணம் செய்து கொண்டது உறுதியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால் உடனே புகைப்படங்களை நீக்கியதாலும் அமலாபால் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாலும் இது உறுதிப்படுத்தப் படாமல் இருக்கிறது.

Related Posts