வால்டர் – திரைப்பட விமர்சனம்
கும்பகோணத்தில் பல குழந்தைகள் திடீரென காணாமல் போகின்றன.அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கும்போது திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவருகின்றன. அவற்றை விறுவிறுப்பாகச் சொல்ல வந்திருக்கும் படம் வால்டர்.
முந்தைய படங்களை விட அழகாகவும் துடிப்புடனும் இருக்கிறார் சிபிராஜ். காவல்துறை அதிகாரி வேடமும் உடையும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. காதலியிடம் குழைவது எதிரிகளிடம் சீறுவது என நடிப்பிலும் முன்னேறியிருக்கிறார்.
நாயகி சிரின் காஞ்சன்வாலா பாடல் காட்சிகளுக்குப் பயன்பட்டிருக்கிறார். கதையில் அவருக்குப் பெரிதாக இடம் இல்லை.
நட்டியின் வேடம் எதிர்பாராத வண்ணம் அமைந்துள்ளது. நீ எப்பவுமே என்னைப் பார்த்திடக்கூடாது என்று நேருக்கு நேராக வசனம் பேசும் காட்சியைவிட கண்கள் மட்டும் தெரியும்படி முகமூடி போட்டுக் கொண்டிருக்கும் போது காவல்துறையிடம் மாட்டுகிற இடத்தில் அவர் கண்களில் தெரிகிற உக்கிரம் அவருடைய நடிப்பாற்றலை உணர்த்துகிறது.
சமுத்திரக்கனியின் வேடம் சக்திமிக்கது. அதற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.
பவாசெல்லதுரைக்கு முக்கிய வேடம். சில் இடங்களில் பொருந்துகிறது. சில இடங்களில் ஒட்டாமல் இருக்கிறது.
ரித்விகா,அபிஷேக், யாமினி சுந்தர் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் இராசாமதியின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். கும்பகோணம் நகரத்தைப் பருந்துப்பார்வையில் பார்த்திருக்கிறார். பல இடங்களில் காட்சிகளின் தீவிரத்தை அவருடைய ஒளிப்பதிவு வெளிப்படுத்துகிறது.
தர்மபிரகாஷின் இசையில் அறிவுமதி எழுதியிருக்கும் மூச்சே அனலென ஆச்சே இளமைத்துள்ளல்,அருண்பாரதி எழுதியிருக்கும் யாரைத் தேடி நெஞ்சமே பாடல் இனிமை. பின்னணி இசையில் அவர் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம்.
எழுதி இயக்கியிருக்கும் யு.அன்பு, புதிதாக ஒரு கதையைப் பிடித்திருக்கிறார். புதுவகை இரத்தவகையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். திரைக்கதையில் வேகம் கூட்டியிருக்க வேண்டும்.
காவல்துறையின் உழைப்பு, அரசியல்வாதிகளின் தன்னலம் மற்றும் பதவி வெறி ஆகியனவற்றைத் தோலுரித்திருக்கிறார். கடைசியில் அரசியல்வாதிக்குக் கொடுக்கும் தண்டனை புதுவிதம்.அதில் படத்தின் பெயருக்கேற்ற மிடுக்கு வெளிப்பட்டிருக்கிறது.











