விமர்சனம்

காலேஜ் குமார் – திரைப்பட விமர்சனம்

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

என்கிற திருக்குறளுக்குப் புதுவிதமாக உரை எழுதியிருக்கிறது காலேஜ்குமார் படம்.

அதிகம் படிக்காத காரணத்தால் உடன்படித்த தணிக்கையாள நண்பரின் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றுகிறார் பிரபு.

ஒருநாள் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அப்போது, என் மகனை உன்னைப்போலவே பெரிய தணிக்கையாளராக ஆக்குகிறேன் என்று சவால் விட்டுவிட்டு வருகிறார்.

ஆனால் அவர் நினைத்தது, நினைத்தது போல் நடக்காமல் நேர்மாறாக நடக்கிறது. அப்படி என்ன நடந்தது?என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் படம்தான் இது.

பிரபுவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல வேடம் அமைந்திருக்கிறது. அவரும் அல்வா சாப்பிடுவது போல அழகாகச் செய்துவிடுகிறார்.

பிரபுவின் மனைவியாக நடித்திருக்கும் மதுபாலா, இளமையாகத் தெரிகிறார். 

பிரபுவின் மகனாக நடித்திருக்கும் ராகுல்விஜய் நல்ல தேர்வு. இளைஞர்களுக்கேயுரிய துடுக்குத் தனத்துடன் இருக்கிறார். 

நாயகி பிரியாவட்லமணி நன்றாக இருக்கிறார். வழக்கமான நாயகிகள் போல் பாடல்களுக்குப் பயன்பட்டிருக்கிறார்.

நாசர், சாம்ஸ் மனோபாலா ஆகியோர் தங்கள் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் குருபிரசாத்ராய் பணி நன்று. பிரபுவை கல்லூரிமாணவனாகவே காட்டியிருக்கிறார்.
 
குதூப் ஈ கிருபா இசையில் பாடல்கள் கேட்கலாம்.

எழுதி இயக்கியிருக்கும் ஹரிசந்தோஷ், ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடம் நடக்கும் நிகழ்வை மாற்றி யோசித்திருக்கிறார். அதை சுவராசியமான திரைக்கதை ஆக்கவும் முயன்றிருக்கிறார்.

பிரபுவைக் கல்லூரி மாணவராக யோசிப்பதற்கே ஒரு மன தைரியம் வேண்டும், ஆனால் இவர் செயல்படுத்தியே காட்டி பல இடங்களில் ரசிக்கவும் வைத்திருக்கிறார்.

பள்ளி கல்லூரிகளில் என் மகன் அல்லது மகள் நன்றாகப் படித்து முதலிடம் பிடிப்பவராக இருக்கவேண்டும் என்கிற பெற்றோரின் எண்ணம் தவறானது என்பதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சொல்லியிருக்கிறார்.

பெற்றோருக்கு மட்டுமின்றி பிள்ளைகளுக்கும் நல்ல பாடம் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில் காலேஜ்குமார் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

Related Posts