சினிமா செய்திகள்

இன்றைய விபத்து கொடூரமானது – கமல் வேதனை

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து கொண்டிருந்தது.

இதற்காக பெரிய பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு அவற்றில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்நிலையில்,பிப்ரவரி 19 இரவு ஒன்பதரை மணியளவில் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். உயிரிழந்தவர்கள் விவரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரியவில்லை.மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சோகமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது….

எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன்.

முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது.

இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

படப்பிடிப்புத் தளத்தில் நடந்த இந்த கோரவிபத்தால் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.

Related Posts