“ஒவ்வொரு நாள் காலையும் மூக்கில் ரத்தம் வரும்’’ – படப்பிடிப்பு அனுபவம் குறித்து தினேஷ்
பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. இப்படம் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்துக்கான இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பா.ரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ், தினேஷ், ஆனந்தி, பிக்பாஸ் புகழ் ரித்விகா, பட இயக்குநர் அதியன் ஆதிரை, இசையமைப்பாளர் தென்மா, நடிகர்களான ரமேஷ் திலக், முனீஸ்காந்த், கலையரசன், வசனகர்த்தா ஆதவன் தீட்சன்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாயகன் தினேஷ் பேசுகையில், “ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுப் போய்விடுவேன். அடுத்த நாள் காலையில் கருப்பு நிறத்துல இரத்தம் மூக்கிலிருந்து வரும். பொதுவா எட்டு வருடம் இரும்புக் கடையில் வேலை பார்த்தாலே இறந்துடுவார்கள் என்கிற செய்தியெல்லாம் இயக்குநர் அதியன் சொல்லிக் கேட்டு அதிர்ச்சியாகியிருக்கிறேன். படத்தில் சின்ன காட்சியில் வந்து போனவர்களாக கூட இருக்கட்டும். எல்லோருக்கும் என் நன்றி. ரஞ்சித் சாரை எனக்கு அரசியல்வாதியா தெரியாது. அன்பு மட்டும் தான்.. எல்லோரும் இணைந்து அன்பா இருக்கலாம். நெகட்டிவா ஏதும் வேண்டாம். மகிழ்ச்சியா இருக்கலாம். ” என்று கூறினார்.
இயக்குநர் அதியன் ஆதிரை பேசும்போது, “ இந்தப் படம் இரும்புக்கடையின் வாழ்வியலை பேசுகிறது. நான் எங்கிருந்து வந்தேனோ, அதைப் பற்றி தான் பேசியிருக்கிறேன். இரும்புக் கடைகளில் இரும்பை சுவாசித்து வாழும் தொழிலாளர்கள் அனைவருமே தங்களுடைய வாழ்க்கையில் பாதியை இழந்துவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் ஐந்து லட்சம் பேர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இரும்புக் கடையை நம்பி வாழ்கிறார்கள். இரும்புக் கடையிலேயே என் வாழ்க்கையும் முடிந்து போயிருக்கலாம். அதிலிருந்து வெளிவந்து இயக்குநராகிவிட்டேன் என்றால் அதற்கு காரணம் ரஞ்சித் அண்ணன் தான். ரொம்ப சீரியஸான படமாக இது இருக்காது. ஆனால் இந்தப் படம் செய்யவேண்டிய வேலையை ரசிகர்கள் மத்தியில் செய்யும்” என்று கூறினார்.

தொடர்ந்து தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது, “ அனைவரின் நம்பிக்கையாக நீலம் புரொடக்ஷன்ஸ் சீக்கிரமே மாறும். இன்னும் அதிக படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். என் மேல் இருந்த அன்பின் காரணமா சம்பளம் இல்லாமல் கூட படத்தில் நடித்துக் கொண்டுத்திருக்கிறார்கள். ஜான் விஜய் அண்ணனுக்கு இன்னுமே காசு கொடுக்கவில்லை. இந்த மேடை பெரியதாக வேண்டும் என்பது மட்டும் தான் என் ஆசை. சமீபத்திய கால சூழலில் நிறைய நல்ல படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அசுரன், கைதி போன்ற படங்கள் அதில், மிக முக்கியமானதாக நினைக்கிறேன். சொல்லக் கூடிய கதைகள் என்றில்லாமல், சொல்லக் முடியாது அப்படி சொல்லப்படும் கதைகளை பேச வந்த ஆட்கள் நாங்கள். மகிழ்ச்சி” என்று முடித்தார்.











