கேடி (எ) கருப்புதுரை – திரைப்பட விமர்சனம்
தமிழகத்தின் தென்பகுதியில் சில இடங்களில், வயது முதிர்ந்தவர்களைக் கருணைக்கொலை செய்துவிடும் வழக்கம் இருந்திருக்கிறது.
தலைக்கூத்தல் என்று சொல்லப்படும் அந்நிகழ்வு எல்லோருக்கும் தெரிந்தே நடக்கும். அதைச் செய்துவைக்கவே ஆட்களும் இருந்திருக்கிறார்கள்.
இந்நிகழ்வை மையமாகக் கொண்ட படம்தான் இது.
மூன்று மகன்கள், இரண்டு மகள்களைக் கொண்ட முதியவர், மனைவியை இழந்தவர், எண்பது வயது ஆனவர் மு.இராமசாமி.
அவர் கோமாவில் இருக்கிறார். இதனால் அவரை முடித்துவிட மூன்று மகன்களும் ஒரு மகளும் முடிவெடுக்கிறார்கள். ஒரு மகள் மட்டும் எதிர்ப்பு.
இவர்கள் ஆவேசமாக விவாதித்துக் கொண்டிருக்கும்போதே, அவருக்கு நினைவு திரும்புகிறது.
தன்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள் என்று தெரிந்தவுடன் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டுப் போய்விடுகிறார்.
போன இடத்தில் எட்டுவயது ஆதரவற்ற சிறுவனைச் சந்திக்கிறார் பெரியவர். இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து பயணிக்கிறார்கள்.
அப்போது என்னவெல்லாம் நடக்கிறது? முதியவர் வீட்டார் என்ன செய்தார்கள்? என்பனவற்றையெல்லாம் சொல்வதுதான் திரைக்கதை.
முதியவர் பாத்திரத்துக்கு முழுமையாகப் பொருந்தியிருக்கிறார் மு.இராமசாமி. நடை உடை பாவனை அனைத்தும் அருமை.
அவர் பிரியாணியைச் சுவைத்து உண்ணும் அழகில் பார்ப்போருக்கு எச்சில் ஊறுவது நிச்சயம்.
அவருக்கேற்றாற்போல் சிறுவன் நாகவிஷால். உண்மையைத்தானே சொன்னேன் என்னை ஏன் அடிக்கிறாங்க? என்று பொருமும் நேரத்திலும் மு.இராமசாமியின் ஆசைகளைப் பட்டியலிட்டு அவற்றை நிறைவேற்றுவதில் காட்டுகிற சிரத்தை உட்பட எல்லாக்காட்சிகளிலும் அசத்தியிருக்கிறான் நாகவிஷால்.
மு.இராமசாமியைத் தேடுபவராக யோக் ஜேபி நடித்திருக்கிறார். அலட்டிக் கொள்ளாமல் ஒவ்வொரு படியாக முன்னேறும் அவர் பாணி நன்று.
மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவில் கிராமங்கள் கண்களைக் கொள்ளை கொள்கின்றன.கதையின் ஆழத்தை உணர்ந்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
சபரிவாசன் சண்முகம் திரைக்கதை,வசனத்தில் வாழ்க்கைப்பாடங்கள் நடத்தப்படுகின்றன.
விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பு பொறுப்பாக இருக்கிறது.
கலை இயக்கம் செய்த இம்மானுவேல் ஜாக்சன் கவனிக்க வைக்கிறார். பெரியவரும் சிறுவனும் தங்க ஒரு வீடமைத்திருக்கிறார் பாருங்கள், நம் நாட்டின் தரத்தை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறது.
கார்த்திகேயமூர்த்தி இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். பின்னணி இசை மிக நன்று.
மதுமிதா இயக்கத்தில் படம் தெளிந்த நீரோடை போல ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக ஓடுகிறது.
இவ்வளவு பெரிய வாழ்க்கை வாழ்ந்தேன் என்னைக் கொல்லப்பாக்குறாங்களே என்று மு.இராமசாமி கண்கலங்கும்போது, அலட்சியமாக உனக்கெல்லாம் இப்பத்தான் எனக்கு பொறக்கும்போதே என்று நாகவிஷால் சொல்லும் காட்சியில் கண்களில் களுக்கென நீர்த்திரை.
சொத்தை எழுதி வாங்கிக் கொண்ட பிறகும் முதியவரை முடிக்கத் திட்டமிடுகிறார்கள் என்பது உறுத்தல்.
நல்ல, திரை அனுபவத்தைக் கொடுத்த இயக்குநர் மதுமிதா பாராட்டுக்குரியவர்.











