பார்த்திபனின் முடிவு தவறானது – வருந்தும் விநியோகஸ்தர்கள்
இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’.
இந்தப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டுமே கேட்கும்.
இப்படிப்பட்ட புதுமுயற்சியில் உருவாகியிருக்கும் இந்தப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே தேதியில் சூர்யாவின் காப்பான் படமும் வெளியாகவிருக்கிறது.
இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் காப்பான் படத்துக்கே முன்னுரிமை கொடுக்கிறார்களாம்.
இதுகுறித்து விநியோகஸ்தர் ஒருவர் கூறியதாவது….,
இந்தவாரம் (செப்டம்பர் 13) ஓரிரு சிறிய படங்கள் மட்டுமே வெளியாகின.ஏற்கெனவே தயாரான இந்தப் படத்தை செப்டம்பர் 13 அன்று வெளியிட்டிருந்தால் இதுவே பெரிய படமாக இருந்திருக்கும்.
அப்படிச் செய்யாமல் காப்பான் வருகிற நேரத்தில் வருவது என்கிற முடிவை எடுத்ததால் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. பெரிய, நல்ல அரங்குகள் இப்படத்துக்குக் கிடைக்கவில்லை.
இதனால் ஒரு புதிய முயற்சி கண்டுகொள்ளாமல் போகக் கூடிய ஆபத்தும் இருக்கிறது என்று வருத்தமுடன் கூறினார்.
ரசிகர்கள் என்னையும் காப்பார்கள் என்று சொல்லி படத்தை செப்டம்பர் 20 ஆம் தேதியே வெளியிடுவேன் என்கிற பார்த்திபனின் முடிவால் அவர் எடுத்துள்ள புதிய முயற்சிக்கே பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதுதான் சோகம்.











