சினிமா செய்திகள்

வெளிவருமுன்பே வரவேற்பைப் பெற்ற தொரட்டி

புதுநடிகர் ஷமன் மித்ரு நாயகனாகவும் புதுநடிகை சத்யகலா நாயகியாகவும் நடித்துள்ள படம் தொரட்டி. நடிகர் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.பி.மாரிமுத்து இயக்கியுள்ளார்.

ஒரேஇடத்தில் ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட ஆடுகளை அடைத்து வைக்கும் இடத்தை பட்டி என்பார்கள். அங்கு சேரும் புழுக்கை எனப்படும் ஆடுகளின் கழிவை வயல்களுக்கு உரமாகப் பயன்படுத்துவார்கள். அது சிறந்த இயற்கை உரம்.

அக்காலத்தில் ஊருக்கு ஊர் சென்று ஆட்டுக்கிடை போட்டு வாழும் மக்கள் கூட்டம் இருந்தது. அவர்கள் இதையே தொழிலாகவும் இயற்கைக்குச் செய்யும் சேவையாகவும் செய்துவந்தனர்.

அவர்கள் கையில் வைத்திருக்கும் கருவிதான் தொரட்டி. உயரமான மரங்கள் மற்றும் உயரமாக வளர்ந்த கொடிகளிலிருந்து ஆடுகளுக்குத் தேவையான உணவைப் பறிக்க அது உதவும்.

அந்தப் பெயரை தலைப்பாக வைத்து ஆட்டுக்கிடை போட்டு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை இரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருக்கும் படம்தான் தொரட்டி.

அக்காலத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளைத் தொகுத்து அவற்றின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

இப்படம் ஆகஸ்ட் இரண்டாம்தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது.

அதில் படம் பார்த்த அனைவரும் படத்தைப் பாராட்டுகின்றனர். தமிழ்க் கலாச்சாரம் பண்பாடு ஆகியனவற்றின் ஒரு பகுதியை மிக அழகாகப் பதிவு செய்திருக்கும் படம். நடிகர்கள் அனைவருமே நடிகர்கள் போல் இல்லாமல் அந்த மக்களாகவே மாறியிருக்கின்றனர் என்று பாராட்டுகின்றனர்.

Related Posts