களவாணி 2 – திரைப்பட விமர்சனம்
ஊருக்குள் வெட்டியாகச் சுற்றிக் கொண்டு சின்னச் சின்னத் திருட்டுகளைச் செய்து கொண்டிருக்கும் விமல், உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு,இரண்டு பெரிய தலைகளோடு மோதி ஊர்த்தலைவராகிறார். இது எப்படி? என்பதுதான்
களவாணி 2.
கஞ்சி போட்டுத் தேய்த்த, மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டி சட்டையுடன், கஞ்சாகருப்புவின் மனைவியிடம் பணத்தை ஏமாற்றிப் பிடுங்குவது, பட்டப்பகலில் ஓவியாவின் ஆட்டைத் தூக்கிக் கொண்டு போக பின்னாலேயே ஓவியா துரத்திக் கொண்டு வந்ததும் எதுவுமே நடக்காதது போல ஆட்டை இறக்கிவிடுவது என்று கொடுத்த வேடத்தை ரசித்து நடித்திருக்கிறார் விமல்.
ஜாடிக்கேத்த மூடி போல கஞ்சாகருப்பு மற்றும் விக்னேஷ் ஆகியோர் அமைய அவர்களோடு சேர்ந்து படம் முழுக்க லூட்டி அடித்திருக்கிறார் விமல்.நடுவில் ஓவியாவோடு காதலும் உண்டு.
ஓவியாவும் புத்தம்புதிது போலவே பிரகாசமாக இருக்கிறார்.பெரிதாக அவருக்கு வேலை இல்லையென்றாலும் படத்துக்குப் பலமாக இருக்கிறார்.சோகத்தையும் சிரிப்புடனே வெளிப்படுத்துவதில் வல்லவியாக இருக்கிறார்.
விமலின் அப்பா அம்மாவாக நடித்திருக்கும் இளவரசு மற்றும் சரண்யாபொன்வண்ணன் ஆகியோர் இன்னொரு நாயகன் நாயகி போல படத்தில் நிறைந்து நன்றாக நடித்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்கள்.
பிரசிடெண்ட் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களாக நடித்திருக்கும் துரை.சுதாகர் வில்லன்ராஜ் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள். துரை.சுதாகர் மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறதெனலாம்.
மணிஅமுதவன் இசையமைத்துள்ள ஒட்டாரம் பண்ணாதே பாடல் கேட்க இனிமை. பார்க்கவும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாசாணி.
ரொனால்ட்ரீகனின் ஓட்டு கேக்க வந்தாங்களே சின்னாத்தா பாடல் தற்கால அரசியலைக் கேள்வி கேட்கும் விதமாக அமைந்திருக்கிறது.
முதல்பாகத்தைப் போலவே கீழ்த்தஞ்சையின் வட்டார வழக்கு இப்படத்துக்குப் பெரும் பலம். கடுமையான அரசியல் நிகழ்வுகளை உள்ளூர் அரசியலை வைத்து மிக எளிமையாகக் கடந்து போக வைத்திருக்கிறார் இயக்குநர் ஏ.சற்குணம்.
ரசிகர்களைக் கவர்வதில் களவாணி முதலிடம் பிடித்தது. இதற்கு இரண்டாமிடம்தான்.











